Pages

Wednesday, December 1, 2010

செத்து மிதக்கும் மீன்கள்

சாய கழிவுகள் கலப்பதால் காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு, டிச. 1-
http://dailythanthi.com/article.asp?NewsID=610842&disdate=12/1/2010&advt=2

காவிரி ஆற்றில் தோல் மற்றும் சாயக் கழிவுகள் கலப்பதால் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. ஆற்றில் கழிவுகள் கலப்பதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாயக் கழிவுகள் கலப்பு

ஈரோடு காவிரி ஆற்றின் கரையோரங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் உள்ளது. துணிகளுக்கு சாயம் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் தண்ணீர் மூலம் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படுகிறது. தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சுத்திகரிக்காமல் நீர் நிலைகளில் கலக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இருப்பினும் பல தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் ஆற்றில் கலக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் அதிகமாக செல்லும் சமயங்களில் கழிவு நீர் கலப்பதால் பொது மக்களுக்கு தெரிவது இல்லை. ஆற்றில் குறைவான நீர் செல்லும் போது கழிவு நீர் கலப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

சாய பட்டறைகளில் இருந்து சாயம் போடப்பட்டு துணிகள் ஆட்டோக்கள் மூலம் காவிரி ஆற்றின் கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு துணிகள் அலசப்படுகிறது. இதனால், காவிரி ஆறு மாசுபட்டு வருகிறது.

செத்து மிதந்த மீன்கள்

இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டது. இதனால், காவிரி ஆற்றில் மழை நீர் மட்டுமே வந்துகொண்டு இருந்தது. இதற்கிடையே நேற்று முன்தினம் சரியாக மழை பெய்யாததால், ஆற்றில் மழைநீரும் குறைவாக வந்தது.

ஆற்றில் ஓடிக் கொண்டு இருந்த குறைவான நீரில் தோல் மற்றும் சாயக்கழிவுகள் கலப்பப்பட்டதால் மீன்கள் செத்து மிதந்தன. நேற்று காலை ஏராளமான மீன்கள் செத்து தண்ணீரில் மிதந்து வந்தன. இதைப் பார்த்து அங்கு குளித்துக் கொண்டு இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலர் தண்ணீரில் மிதந்து சென்ற செத்த மீன்களை அள்ளி கரையில் போட்டனர்.

தொடர்ந்து ஆற்றில் சாயக் கழிவுகள் கலக்கப்படுவதால் மீன்கள் அடிக்கடி செத்து மிதக்கின்றன. மீன்களுக்கே இந்த நிலை என்றால், அதே நீரை குடிநீராக பயன்படுத்தும் மக்களின் உடல் நிலையும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, சாயம் மற்றும் தோல் கழிவுகளை குடிநீர் ஆதாரமாக உள்ள காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.