பதிவு செய்த நாள் : டிசம்பர் 05,2010,22:41 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=140017
லண்டன் : பிரிட்டனில் வசிக்கும் குடும்பம் ஒன்று, பாம்பு, பல்லி உள்பட 80 வகையான விலங்குகளை தங்களது வீட்டில் வளர்த்து வருகின்றனர். பிரிட்டனில் லீட்ஸ் அருகே, மோர்லியில் வசிக்கும் ஆலன் ஹெவிட் (44), ஹெத்தர் (40) தம்பதி தங்கள் வீட்டில், 20 விஷமுள்ள, விஷமற்ற பாம்புகள், விஷ சிலந்திகள், 25 பாலுட்டி விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட 80 விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அதில், முதலை, பல்லி, தவளை, கீரி, ஆமை, மலைப்பாம்பு, கிளி, உள்ளிட்ட 30 வகையான விலங்குகளை இவர்கள் வளர்க்கின்றனர்.
இந்த தம்பதிக்கு அபிகெய்ல் (17), கிரேஸ் (15), எட்வர்ட் (10) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அவர்களும் இதே வீட்டில், இந்த விலங்குகளோடுதான் வசிக்கின்றனர். கிட்டத்தட்ட விலங்குகள் சரணாலயம் போன்ற இந்த வீட்டில் உள்ள விலங்குகளின் மொத்த மதிப்பு 14 லட்ச ரூபாய். இந்த விலங்குகளை அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தி, அதன் மூலம் அவற்றை பராமரிக்க அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்காக, அவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆலன் ஹெவிட் கூறியதாவது: இந்த விலங்குகளுடன், வீட்டில் வசிப்பதற்கு முதலில் பயமாகத்தான் இருந்தது. எங்களை விட அண்டை வீட்டுக்காரர்களுக்கு மிகவும் பயம். ஆனால், இப்போது அந்த பயம் இல்லை. எங்கள் வீட்டில் இருக்கும் விலங்குகள் பெரும்பாலானவை, போலீசாரிடமிருந்து வாங்கியவை. விலங்குகளை கடத்துவோர், அவற்றை முறைகேடாக பயன்படுத்துவோர் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் இருந்து மீட்கப்பட்டவை ஆகும். அவைகளை நாங்கள் வாங்கி வளர்த்து வருகிறோம். எங்கள் பிள்ளைகளும், அவைகளிடம் மிகுந்த பிரியத்துடன் இருக்கின்றனர். இவற்றை பராமரிக்க, பெரும் செலவாகிறது. எனவே, அறக்கட்டளை ஒன்றை அமைத்து, அதன் மூலம், பராமரிக்க திட்டமிட்டு, அதற்காக விண்ணப்பித்துள்ளோம். இவ்வாறு ஆலன் ஹெவிட் கூறினார்