ஆம்பூர் அருகே, காட்டுபகுதியில் 5 குரங்குகள் மர்ம சாவு; உயிருக்கு போராடிய குட்டி மீட்பு இறந்தவற்றை சுற்றி நின்று, சகாக்கள் கண்ணீர்விட்டு அழுத சோகம்
ஆம்பூர், டிச.4-
http://dailythanthi.com/article.asp?NewsID=611439&disdate=12/4/2010&advt=2
ஆம்பூர் அருகே காட்டு பகுதியில் 5 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. உயிருக்கு போராடிய குட்டி குரங்கு ஒன்றை வருவாய்த்துறையினர் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
குரங்குகள் கண்ணீர்
ஆம்பூர் அருகே விண்ணமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட காட்டுக்கொல்லை பகுதியில் இருந்து வெள்ளக்கல் செல்லும் சாலை ஓரம் உள்ள காட்டுப்பகுதியில் 5 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த குரங்குகளை சுற்றி 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.
குரங்குகள் கூட்டமாக இருப்பதை அந்த வழியே சாலையில் சென்றவர்கள் கண்டு அருகில்சென்று பார்த்தனர். அப்போது, அங்கு 5 குரங்குகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுபற்றி அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கார்மேகத்திற்கும், ஆம்பூர் வனத்துறை அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வருவாய் ஆய்வாளர் பாபு, கிராம நிர்வாக அலுவலர் கார்மேகம், வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது இறந்து கிடந்த ஒரு குரங்கு ஒன்றின் கையில் ஒரு குட்டி குரங்கு இருந்தது. ஆனால் அந்த குட்டி குரங்கு உயிருடன் இருப்பது தெரிய வந்தது. உடனே அதிகாரி அந்த குட்டி குரங்கை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
குரங்குகள் சோகம்
இறந்து கிடந்து குரங்குகளை அப்புறப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது 20-க்கும் மேற்பட்ட குரங்குகள் அந்த பகுதிகளில் இருந்த மரங்களில் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டு, சோகத்தில் அங்கும், இங்கும் தாவின. இது அங்கிருந்தவர்களுக்கு பரிதாபத்தை ஏற்படுத்தியது.
பின்னர் அந்த குரங்குகளை மீட்டு வனத்துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குரங்குகள் எப்படி இறந்தன? என்பது தெரியவில்லை. யாரேனும் மர்ம நபர்கள் விஷம் வைத்து குரங்குகளை சாகடித்தார்களா? அல்லது வேறு பகுதியில் இறந்து கிடந்த குரங்கை இங்கு வந்து போட்டு விட்டு சென்றனரா? என்ற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.