Pages

Tuesday, October 12, 2010

தோட்டத்துக்குள் புகுந்த காட்டு பன்றிகள்

அம்மாப்பேட்டை அருகே தோட்டத்துக்குள் புகுந்து காட்டு பன்றிகள் நிலக்கடலையை தின்று நாசம் செய்தன

அம்மாப்பேட்டை, அக்.12-
http://dailythanthi.com/article.asp?NewsID=600077&disdate=10/12/2010&advt=2

அம்மாப்பேட்டை அருகே தோட்டத்துக்குள் காட்டுப்பன்றிகள் புகுந்து கடலைகளை தின்று நாசம் செய்தன.

வனவிலங்குகள் தொல்லை

ஈரோடு மாவட்டம், அம்மாப்பேட்டை அருகே சென்னம்பட்டி, முரளி, ஜர்த்தல், சித்தக்கவுண்டனூர், சென்றாயனூர், கொமராயனூர் ஆகிய மலை கிராமங்களில் விவசாயிகள் வாழை, மஞ்சள், மரவள்ளிக்கிழங்கு, நிலக்கடலை, வெங்காயம், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டுள்ளார்கள்.

மலையை ஒட்டிய வனப்பகுதிக்குள் இருந்து அடிக்கடி யானைகள் வந்து வாழை, மஞ்சள் பயிர்களை நாசம் செய்து விடுவதால் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் கொமராயனுர் பகுதியில் மின்வேலிகளை உடைத்துவிட்டு யானைகள் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து நாசம் செய்தன. இப்போது காட்டுப்பன்றிகள் அந்தப்பகுதி விவசாயிகளுக்கு பெரிய தொல்லை கொடுத்து வருகின்றன.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

சென்னம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி குருசாமி தன்னுடைய நிலத்தில் 11/2 ஏக்கர் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டு இருந்தார். நிலக்கடலை செடிகள் நன்றாக வளர்ந்து கடலை வேர்பிடித்து இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் மலைப்பகுதியில் இருந்து காட்டுப்பன்றிகள் கூட்டமாக குருசாமியின் தோட்டத்துக்குள் புகுந்தன. நிலக்கடலை செடிகளை தின்று நாசம் செய்து விட்டு சென்று விட்டன. தோட்டத்துக்கு வந்த குருசாமி நிலக்கடலை பயிர்கள் சேதப்படுத்தப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் இரவும் அதேபோல் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள கடலை செடிகளை நாசம் செய்துவிட்டு சென்றுள்ளன.

பயிர்களை பாதுகாக்க...

இதுபற்றி விவசாயி குருசாமி கூறும்போது:-

என்னுடைய தோட்டத்தில் 2 முறை காட்டுப்பன்றிகள் புகுந்து நாசம் செய்து விட்டன. அருகே உள்ள சின்னு, தம்பி ஆகியோரது தோட்டங்களிலும் புகுந்து காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்துள்ளன.

இரவு நேரங்களில் அடிக்கடி மலைப்பகுதியில் இருந்து யானை, காட்டுப்பன்றி, கரடிகள் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்தால் பணம் விரயம் ஆகிறது. தோட்டத்தில் காவலுக்கு இருப்பவர்கள் காட்டுப்பன்றிகளை தடுக்க நினைத்தால் பன்றிகள் தாக்க வருகின்றன. எனவே பயிர்களை பாதுகாக்க வனத்துறை அதிகாரிகள் விவசாய தோட்டங்களுக்குள் விலங்குகள் நுழையாமல் இருக்க கூடுதலாக மின் வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவசாயி குருசாமி கூறினார்.