Pages

Tuesday, October 12, 2010

வன விலங்குகளை காப்பது, காட்டையும், நாட்டையும் பாதுகாப்பதாகும்:வனத்துறை அமைச்சர் பேச்சு

பதிவு செய்த நாள் : அக்டோபர் 11,2010,23:19 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=104496
 
கோவை:""வன விலங்குகளைப் பாதுகாப்பது, காட்டையும், நாட்டையும் பாதுகாப்பதாகும்,'' என்று தமிழக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் பேசினார்.

கோவை மணி மேல்நிலைப்பள்ளியில் தமிழக வனத்துறையின் சார்பில் நேற்று நடந்த வன உயிரின வார நிறைவு விழாவில் அவர் பேசியதாவது:ஆங்கிலேயர் காலத்திலேயே வனத்தைக்காக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திரத்துக்குப் பின், 1949ல் வனப்பாதுகாப்புச் சட்டம், 1955ல் மலையிடப் பாதுகாப்புச் சட்டம், 1972ல் வன உயிரின பாதுகாப்புச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அப்படியும் காடுகளைக் காப்பாற்ற முடியாததால்,முன்னாள் பிரதமர் இந்திராவால் 1980ல் வனப்பாதுகாப்புச் சட்டம் என்ற கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டது.

அதைத் தொடர்ந்து 1988ல் வனக்கொள்கை அறிவிக்கப்பட்டு, மொத்த நிலப்பரப்பில் மூன்றில் ஒரு பங்கு பரப்பு,வனமாக இருக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டு,அதற்கான முயற்சியும் நடந்து வருகிறது. உலகிலுள்ள 25 அதி முக்கிய சுற்றுச்சூழல் மண்டலங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையும் ஒன்று. சூரத்தில் துவங்கி, கன்யாகுமரி வரை 1,400 கி.மீ., தூரத்துக்குத் தொடரும் இந்த மலைத்தொடர், தமிழகத்தில் 450 கி.மீ., அமைந்துள்ளது. உலகிலுள்ள 16 ஆயிரம் ஆர்க்கிட்களில் 5,640 ஆர்க்கிட்கள், இந் மலைக்காடுகளில் உள்ளன. பயிரிடும் தாவரங்கள் 533, 1,530 வகையான மூலிகைகள், 260 வகையான வன உயிரினங்கள், 230 வகையான அழியும் வன உயிரினங்கள், பறவை இனங்கள் 454, பாலூட்டி வகைகள் 177 என தமிழக வனப்பகுதி, பல விதமான வன உயிரினங்களை உள்ளடக்கி, செழிப்புடைய வனமாகத் திகழ்கிறது.

மொத்தம் 3 புலிகள் காப்பகங்களும், 10 வன உயிரினச் சரணாலயங்களும், 12 பறவைகள் சரணாலயங்களும் உள்ளன. வண்டலூர் வன உயிரினப் பூங்காவை ஆண்டுக்கு 15 லட்சம் பேர் ரசிப்பதால், அங்கு 125 கோடி ரூபாய் மதிப்பில் "நைட்சபாரி' எனப்படும் இரவு சவாரி ஏற்படுத்தும் பணி துவங்கியுள்ளது. திருச்சி எம்.ஆர்.புரத்தில் அதேபோன்ற பிரமாண்டமான வன உயிரினப் பூங்கா அமைக்க முயற்சி நடக்கிறது.

கடந்த 1996ல் துவக்கப்பட்ட காடு வளர்ப்புத் திட்டம் மாபெறும் வெற்றி பெற்றது. இப்போது காடு வளர்ப்புத் திட்டம்-2 என்ற திட்டத்தில் ஒரு லட்சத்து 77 ஆயிரம் ஹெக்டேர் பரப்பிலான காடுகளை தரம் உயர்த்தும் முயற்சி நடந்து வருகிறது. இதற்காக 547 கோடி ரூபாய் நிதியுதவி ஜப்பானில் பெறப்பட்டு, 154 கோடி ரூபாய் நிதியை தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் 800 கிராமங்களைச் சேர்ந்த 6லட்சத்து 96 ஆயிரம் பேர் பயன் பெறுகின்றனர்.இப்போது சமவெளிகளில் காடுகளை வளர்க்கும் திட்டத்துக்கு, 28 கோடியே 14 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, 80 ஆயிரத்து 417 ஏக்கர் பரப்பில் மரங்களை வளர்க்க 56 ஆயிரத்து 132 விவசாயிகளுக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் இத்திட்டத்துக்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக, புலிகள் கணக்கெடுப்பு நடந்தபோது 3,642 புலிகள் இருந்ததும், தமிழகத்தில் 62 புலிகள் இருந்ததும் தெரியவந்தது. கடந்த 2007ல் கணக்கெடுத்தபோது, இந்தியாவில் புலிகள் எண்ணிக்கை 1,411 புலிகளாகக் குறைந்து போய் விட்டது. ஆனால், தமிழகத்தில் 76 புலிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது; தற்போது இதன் எண்ணிக்கை 100க்கும் அதிகமாக இருக்குமென்று தெரிகிறது.வன உயிரினங்களைப் பாதுகாப்பது, காட்டைப்பாதுகாப்பதோடு மட்டுமின்றி, நாட்டைப் பாதுகாப்பதும், மக்களைப் பாதுகாப்பதுமாகும். நாம்தான் நாளைய சந்ததியைக் காப்பாற்ற மரங்களை வளர்க்க உறுதி எடுக்க வேண்டும்.இவ்வாறு அமைச்சர் செல்வராஜ் பேசினார்.