Pages

Wednesday, October 27, 2010

விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை புதிதாக பொறுப்பேற்ற சத்தி வன மாவட்ட அதிகாரி சதீஷ் பேட்டி

பவானிசாகர், அக்.28-
http://dailythanthi.com/article.asp?NewsID=603516&disdate=10/28/2010&advt=2

சத்தியமங்கலம் வனப்பகுதியில் வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதிதாக பொறுப்பேற்ற சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரி சதீஷ் கூறினார்.

புதிய வனமாவட்ட அதிகாரி

சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரியாக பணியாற்றிய ராமசுப்பிரமணியம், நீலகிரி வடக்கு மாவட்ட வன அதிகாரியாக மாற்றம் செய்யப்பட்டார்.
அவருக்கு பதிலாக நீலகிரி மாவட்டம் கூடலூர் வனமாவட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த சதீஷ், சத்தியமங்கலம் வன மாவட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.

பிறகு இவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலி, யானைகள் உள்பட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. வனவிலங்குகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளை வேட்டையாடுபவர்கள் மீதும், வனக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வனப்பகுதிகளில் பகல், இரவு என்று பாராமல் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பவானிசாகர் வனப்பகுதி கர்நாடக வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளுக்கு தின்பண்டங்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் குரங்கு போன்ற வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்க முடியும். வனப்பகுதியை பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிக்குள் யாரும் பிளாஸ்டிக் பொருட்களை வீச வேண்டாம்.
இவ்வாறு சத்தியமங்கலம் வனமாவட்ட அதிகாரி சதீஷ் கூறினார்.

வாழ்த்து

புதிதாக பொறுப்பேற்ற சத்தியமங்கலம் வனக்கோட்ட அதிகாரி சதீசுக்கு, சத்தியமங்கலம் கூடுதல் வனக்காப்பாளர் (பயிற்சி) அசோக்குமார், பத்மா, ரேஞ்சர்கள் ராஜ்மோகன், சண்முகம், சிவமல்லு, தங்கப்பழம் மற்றும் வனவர்கள், அலுவலக பணியாளர்கள் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.