Pages

Saturday, October 30, 2010

புலியை வேட்டையாடுவோருக்கு கிடுக்கிப்பிடி

புலியை வேட்டையாடுவோருக்கு கிடுக்கிப்பிடி : ஒரு கோடி ரூபாய் அபராதம், 7 ஆண்டு ஜெயில்
 
 
பதிவு செய்த நாள் : அக்டோபர் 31,2010,00:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=117132
 
 
 
புதுடில்லி : அரிய வகை வன விலங்குகளை வேட்டையாடுவோருக்கு எதிராக, கடுமையான சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. புலி போன்ற வன விலங்குகளைக் கொன்றால், ஒரு கோடி ரூபாய் அபராதத்துடன், ஏழு ஆண்டு வரை சிறை தண்டனையும் கிடைக்கும்.வன விலங்குகளை வேட்டையாடுவோரை கட்டுப்படுத்த, வனத் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தாலும், அது பெரிய அளவுக்கு பயன் அளிக்கவில்லை. விலங்குகள் வேட்டையாடப்படுவது தொடர்கதையாக உள்ளது. இதைத் தடுக்க, தற்போது மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டு, தண்டனை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது: வன விலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க, வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறையினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் வகையில், சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சட்ட மசோதா, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப் பின்,  பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும்.இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புதிய சட்ட திருத்தத்தின்படி, வனவிலங்குகளை பாதுகாக்கவும், அவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் மேலாண்மை மற்றும் அறிவியல் துறை என்ற இரண்டு அமைப்புகள் உருவாக்கப்படும். புதிய சட்ட திருத்தம், சர்வதேச அளவிலான வனவிலங்கு சட்டத்துக்கு ஏற்றவகையில் இருக்கும்.விலங்குகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட வரைமுறைப்படி பிரிக்கப்பட்டு, அட்டவணைப் படுத்தப்படும். இதன்படி, புலி போன்ற விலங்குகள், முதல் பிரிவில் வரும். முதல் பிரிவில் உள்ள புலி உள்ளிட்ட விலங்குகளை வேட்டையாடி கொலை செய்வோருக்கு, ஐந்து லட்ச ரூபாயிலிருந்து அதிகபட்சமாக ஒரு கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், ஐந்தாண்டில் இருந்து அதிகபட்சமாக ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.இரண்டாவது பிரிவில் உள்ள அரிய வகை பறவைகள் போன்றவற்றை வேட்டையாடுவோருக்கு, மூன்றில் இருந்து ஐந்தாண்டு வரை, சிறை தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். விலங்குகளை துன்புறுத்துவோருக்கும் தண்டனை உண்டு.இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.