Pages

Wednesday, October 6, 2010

சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்

ஏழுமலையான் கோவில் அருகே கரடிகள் அட்டகாசம் திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்

திருமலை, அக்.6-
http://dailythanthi.com/article.asp?NewsID=598721&disdate=10/6/2010&advt=2

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே ஒரு குப்பைத்தொட்டிக்குள் கரடிகள் புகுந்து கழிவுப்பொருட்களை சாப்பிட்டு அட்டகாசம் செய்தன. அதேபோல், திருப்பதி மலைப்பாதைகளில் சிறுத்தைப்புலிகள் நடமாடின. அதை பார்த்த பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கரடிகள் அட்டகாசம்

திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகில் அருங்காட்சியகம் உள்ளது. அந்த கட்டிடத்தின் பின்புறம் குப்பை தொட்டிகள் உள்ளன. அதில் கழிவுப்பொருட்கள், பக்தர்கள் சாப்பிட்டுவிட்டு போடும் எச்சில் இலைகள் ஆகியவை கொட்டப்படுகின்றன. அதன் அருகாமையில் ஆர்.பி.சென்டர் என்ற குடியிருப்புகள் அமைந்துள்ளன.

நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் குப்பைத்தொட்டிகளுக்கு 2 கரடிகள் வந்தன. அந்த கரடிகள் குப்பைத்தொட்டிகளில் கிடந்த எச்சில் இலைகள், கழிவுப்பொருட்கள் போன்றவற்றை கிளறி, அதில் இருந்த கழிவுப்பொருட்களை சாப்பிட்டுக்கொண்டு இருந்தன.

காட்டுக்குள் விரட்டியடிப்பு

அப்போது அந்த வழியாக சென்ற பக்தர்கள் கரடிகளை பார்த்து விட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவம் திருமலை முழுவதும் காட்டுத்தீ போல பரவியதும், பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து ஆர்.பி.சென்டர் பகுதி குடியிருப்பு வாசிகள் திருப்பதி தேவஸ்தானத்துக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் வனத்துறை சிப்பந்திகள் கையில் தடி, கம்புகளுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, 2 கரடிகளையும் காட்டுக்குள் விரட்டியடித்தனர்.

கொஞ்சி குலாவிய சிறுத்தைகள்

அதேபோல்,திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் திவ்யாராமம் என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 2 சிறுத்தைப்புலிகள் நடமாடிக்கொண்டு இருந்தன. மறுநாள் காலை 6.30 மணியளவில் அதே இடத்தில் மீண்டும் 2 சிறுத்தைப்புலிகளின் நடமாட்டம் காணப்பட்டது.

அந்த பகுதியில் மலைப்பாதை ஓரம் இருந்த ஒரு பலா மரத்தில் ஏறி 2 சிறுத்தைப்புலிகளும் கொஞ்சி குலாவி விளையாடிக்கொண்டு இருந்தன. இதனை அந்த வழியாக வேலைக்கு சென்ற கூலித்தொழிலாளர்களும், பக்தர்களும் பார்த்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

கூண்டுகள் வைக்கப்படும்.

இதுபற்றி அவர்கள் திருமலை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும், வனத்துறை அதிகாரி பிரதீப் மற்றும் வனத்துறை சிப்பந்திகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுத்தைப்புலிகளின் கால் தடங்களை பார்வையிட்டு, ஆலோசனை நடத்தினர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி கூறும்போது, "பாலாஜி நகர், மான் பூங்கா, கருடாத்திரி நகர் பகுதிகளில் சிறுத்தைப்புலிகள் நடமாட்டம் காணப்படுகிறது. சிறுத்தைப்புலிகளை பிடிக்க வனப்பகுதியில் 2 கூண்டுகள் வைக்கப்படும்" என்றார்.