Pages

Tuesday, October 12, 2010

யானை மிரண்டு ஓடியது

மதுரையில் யானை மிரண்டு ஓடியது; பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
துதிக்கையால் தாக்கி தள்ளியதில் பாகன் காயம்

மதுரை, அக்.12-
http://dailythanthi.com/article.asp?NewsID=600016&disdate=10/12/2010&advt=2

மதுரையில் நேற்று யானை மிரண்டு ரோட்டில் ஓடியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். மேலும் அது துதிக்கையால் தாக்கி தள்ளியதில் பாகன் காயம் அடைந்தார்.

இதுபற்றிய விவரம் வருமாறு:-

ஜெயப்பிரியா

மதுரை பாண்டிய வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். `ஜெயப்பிரியா` என்ற இந்த பெண் யானையை அசோக்குமார் என்பவர் பராமரித்து, அதற்கு பாகனாகவும் இருந்து வருகிறார்.

திருமணம் உள்பட பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளுக்கு இந்த யானை வாடகைக்கு விடப்படுகிறது. அதன்படி செல்லூர் மீனாட்சிபுரத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றுக்காக நேற்று முன்தினம் இரவு ஜெயப்பிரியாவை அந்த பகுதிக்கு அசோக்குமார் அழைத்து சென்றார்.

இந்த நிலையில் விருதுநகரைச் சேர்ந்த யானைப் பாகன்களான ராஜா, கண்ணன் ஆகியோர் நேற்று காலை அசோக்குமாரை பார்க்க வந்தனர். அப்போது ஒரு அவசர வேலை காரணமாக அவர்களிடம் யானையை ஒப்படைத்துவிட்டு, அசோக்குமார் வெளியில் சென்றிருந்தார். அந்த நேரத்தில் மற்றொரு பாகனான கண்ணன் அதே பகுதியில் ஒரு தியேட்டர் அருகே யானையை கட்டிப்போட்டு அதற்கு அவல் கொடுத்துவிட்டு, பிறகு தண்ணீர் வைக்க முயன்றார்.

யானை மிரண்டது

அப்போது புதிய பாகனை கண்ட யானை திடீரென்று மிரண்டது. தன்னை நெருங்கவிடாமல் தும்பிக்கையால் அந்த பாகனை ஓங்கித் தள்ளிவிட்டது.
பிறகு அதன் காலில் கட்டியிருந்த சங்கிலியை இழுத்து அறுத்துக்கொண்டு அதே பகுதியில் ரோட்டில் ஓடத் தொடங்கியது. நடுரோட்டில் யானை ஓடி வருவதைப் பார்த்தவர்கள், அதற்கு மதம் பிடித்து விட்டதோ என்று கருதி அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

உடனே யானை உரிமையாளர் லட்சுமணனுக்கும்,பாகன் அசோக்குமாருக்கும் போனில் தகவல் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அவர்கள் மீனாட்சிபுரத்துக்கு விரைந்து வந்தனர். யானையைப் பார்த்து சில சைகைகள் காட்டி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தகவல் அறிந்த வனத்துறை இன்ஸ்பெக்டர் சாகீர் தலைமையில் ஊழியர்களும், செல்லூர் போலீசாரும் அங்கு சென்றனர். அவர்கள் யானைப் பாகனிடம் விசாரணை நடத்தினர்.

பாகன் காயம்

யானை தள்ளிவிட்டதில் படுகாயம் அடைந்த கண்ணன் ` 108 `ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு, மேலூர் ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.யானை மிரண்டு ஒடிய சம்பவம் அந்தப் பகுதியில் நேற்று பரபரப்பை உண்டாக்கியது.