காகம் பறந்தால் தான் பொங்கல்: சகுனம் பார்க்கும் கிராமம்
ஜனவரி 14,2011,23:05 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=166229
உசிலம்பட்டி:மாட்டுப்பொங்கல் தினத்தில், கிராமத்து பெரியவர்கள் கோயிலில் கூடி வழிபாடு நடத்தும் போது, காகம் குறிப்பிட்ட திசையில் பறந்தால் தான், கிராமத்தினர் பொங்கல் வைக்கின்றனர். இப்படி சகுனம் பார்த்து பொங்கல் வைப்பதை இன்றும் தொடர்கின்றனர் தொட்டப்பநாயக்கனூர் அருகில் உள்ள ஸ்ரீரங்காபுரம் கிராமத்தினர்.உசிலம்பட்டி அருகே உள்ளது தொட்டப்பநாயக்கனூர். இங்கு ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில், அவர்களது வகையறாவைச் சேர்ந்த கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர் வசித்து வந்தனர். தற்போது ஸ்ரீரங்காபுரத்தில் மட்டுமே வசிக்கும் இவர்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பு, விவசாயப்பணி ஆகியவற்றை தொழிலாக கொண்டுள்ளனர்.
இவர்கள் தங்கள் வீடுகளில் மட்டும் உணவு உண்பது, கிராமத்திற்குள் செல்லும் போது செருப்பு அணியாமல் செல்வது என பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வசிக்கின்றனர். காலமாற்றத்தில் இது போன்ற கொள்கைகளை பின்பற்ற முடியாமல் போனாலும் வயதானவர்கள் இந்த கட்டுப்பாடுகளை இன்னும் கடைப்பிடிக்கின்றனர். பொங்கல் பண்டிகையையும் இவர்கள் வினோதமாக கொண்டாடுகின்றனர். தை பொங்கல் அன்று அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைத்து, முன்னோர்களுக்கு கரை இல்லாத வேட்டி, சேலைகள் வைத்து வழிபாடு நடத்துகின்றனர்.
மறுநாள் மாட்டுப்பொங்கலுக்காக கிராமத்தில் உள்ள பெருமாள் கோயிலின் கூரையை தரகு, காமாட்சிபுல் கொண்டு வேய்கின்றனர். அன்றைய தினம் பகல் 2 மணியளவில் பெரிய வீட்டு நாயக்கர், கம்பளி நாயக்கர், கோடாங்கி நாயக்கர் மற்றும் கிராமத்து பெரியவர்கள் பெருமாள் கோயில் முன் கூடுவர். கம்பளி விரிக்கப்பட்டு அதில் வடக்கு திசையை நோக்கியபடி முக்கியமானவர்கள் அமர்கின்றனர்.
மூங்கில் கூடை, மூங்கில் கம்பு முதலியவை முன் வைக்கப்படும். மஞ்சள், துளசி, வில்வம், கோமியம், பால், பசுஞ்சாணம், காமாட்சிபுல், உள்ளிட்டவற்றை கலந்து, தீர்த்தம் தயாரித்து கோயில் முன் வைத்து சிறப்பு வழிபாடு நடத்துவர். அனைவரும் சேர்ந்து 108 முறை ஜக்கம்மாள் உள்ளிட்ட தெய்வங்களை தரையில் விழுந்து வணங்குவர். இவ்வாறு அனைவரும் வழிபாடு நடத்தும் போது, காகம் கிழக்கில் இருந்து மேற்காக சென்று, பழையபடி மேற்கில் இருந்து கிழக்காக பறக்க வேண்டும்.
காகம் இப் பகுதிக்குள் கடக்க வேண்டும் என எல்லையையும் வைத்துள்ளனர். காகம் குறிப்பிட்ட படி பறந்த பிறகு, தயாரித்து வைத்துள்ள தீர்த்தத்தை கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகள், ஆடு, மாடு தொழுவங்களில் தெளிப்பர். கிராமத்தின் அனைத்து பகுதிகளுக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்ட பின், பெருமாள் கோயில் முன் பொங்கல் வைக்கப்படும். இதன்பின், அனைத்து வீடுகளிலும் பொங்கல் வைக்கின்றனர்.
பொங்கல் வைத்த பின், ஒவ்வொரு வீட்டின் தொழுவத்திலும் பசுஞ்சாணத்தால் மெழுகி, கோலமிட்டு வாழை இலையில் எலுமிச்சம்பழம், மாவிலை, பூசணிக்காய், பொங்கல் உள்ளிட்டவற்றை வைப்பர். இதில் விசேஷமாக கம்பு தானியத்தை வைத்து தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டையும் அடங்கும். பெருமாள் கோயிலில் இருந்து கிராமத்தினர் ஒவ்வொருவரது வீட்டுக்கும் அனைவரும் சென்று பொங்கல் பூஜையில் பங்கேற்பர். இதன் பின், மாடுகள் அவிழ்த்து விட்டு கிராமத்தை சுற்றிவரச் செய்த பின், மாட்டுப்பொங்கலை நிறைவு செய்கின்றனர்.
கம்பளி நாயக்கர் சின்ராஜ் கூறியதாவது: ஊரில் தீட்டு இருந்தால் அதை அகற்ற, சில வழிபாடுகளை மாட்டுப்பொங்கல் தினத்தில் நடத்துகிறோம். பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து வழிபாடு நடத்தும் போது காகம் கிழக்கில் இருந்து மேற்காகச் சென்றால் தீட்டினால் "ஊர்கட்டு' விழுந்துள்ளது என்போம். பின்னர் காகம் மேற்கில் இருந்து கிழக்காக பறந்தால் தீட்டினால் ஏற்பட்ட "ஊர்கட்டு' அவிழ்ந்து விட்டதாக அர்த்தம். இதன் பின்னர்தான் தீர்த்தம் அனைத்து வீடுகளுக்கும் தெளித்து ஊர் சுத்தம் செய்த பின் பொங்கல் வைக்க துவங்குவோம்.
காகம் எப்படியும் வழிபாடு நடக்கும் போது பறந்து சகுனம் கூறிவிடும். அப்படி பறக்க தாமதமானால், கோடாங்கி நாயக்கர் கிராமத்திற்கு வெளியில் இருந்து மணல் எடுத்து வந்து சில சடங்குகளைச் செய்வார். பின்னர் மீண்டும் தெய்வங்களை வணங்குவோம். காகம் பறந்து விடும். என் இளமை காலத்தில் இருந்து ஒரு முறைகூட காகம் பறக்காமல் இருந்ததில்லை. எப்படியும் பறந்து சகுனம் காட்டிவிடும் என்றார்.
பெரியவீட்டு நாயக்கர் ரங்கசாமி கூறியதாவது: எங்கள் சமூகத்திற்கென்று பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்தன. ஓட்டலில் சாப்பிடுவதில்லை. கிராமத்தில் ஜக்கம்மாளின் ஆணைக்கிணங்க செருப்பு அணிவதில்லை. தற்போது அவையெல்லாம் மாறி வருகிறது. முக்கிய திருவிழாக்களை மட்டும் பழையகாலத்தில் நடந்தபடி முடிந்த அளவு நடத்தி வருகிறோம்.
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட மாடுகள் அனைத்தையும் கிராமத்திற்கு கொண்டு வந்து விடுவோம். கம்பினால் செய்யப்பட்ட விசேஷ கொழுக்கட்டை, பொங்கல் வைத்து பூஜைகள் முடிந்த பின் தொழு மாடுகளை முதலில் திறந்து விடுவோம். பின்னர் பால்மாடுகள், ஆடுகளையும் திறந்து விட்டு கிராமத்தை வலம் வரச்செய்வோம். ஆடுமாடுகள் நோய் நொடி இல்லாமல் இருக்க மாட்டுப்பொங்கல் தினத்தில் இந்த வழிபாடுகள் நடத்தி வருகிறோம் என்றார்