சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல் முறைப்படி ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் கலெக்டர் மகேசன் காசிராஜன் அறிவிப்பு
திருச்சி, ஜன.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=620228&disdate=1/13/2011&advt=2
ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து கலெக்டர் மகேசன் காசிராஜன் சுப்ரீம் கோர்ட்டு வழிமுறையை அறிவித்துள்ளார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் மகேசன் காசிராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜல்லிக்கட்டு விழா
ஜல்லிக்கட்டு விழா 2 வகையாக பிரிக்கப்படுகிறது. பெரிய வகை விழாவின் அமைப்பாளர் ரூ.5 லட்சமும், சிறிய வகை விழா அமைப்பாளர்கள் ரூ.2 லட்சமும் பிணை வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஜல்லிகட்டு அமைப்பாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் காளைகள் குறித்து தனித்தனியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சென்னை மத்திய பிராணிகள் நலவாரிய அமைப்புக்கு 30 நாட்களுக்கு முன்னர் விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அவ்வாறு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்களுடன் இணைக்க வேண்டிய சான்றுகள் வருமாறு:-
முன்னெச்சரிக்கை
செயல்படும் கால்நடை விதிகள் 2001-ன்படி பதிவு செய்யப்பட்டதற்கான சான்று. பங்குபெறும் மாட்டின் முன்புறம், பின்புறம், வலப்புறம் மற்றும் இடப்புறம் என 4 பக்கங்களிலும் எடுத்த புகைப்படத்தின் 8*12 அளவிலான நான்கு பிரதிகள் தலா நான்கு எண்ணிக்கை. ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான இடம், நாள், நேரம் மற்றும் இதர முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் உள்பட அனைத்து விபரங்களையும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கலெக்டரிடம் நேரிடையாக சமர்ப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நடத்தப்படும் இடத்தில் இருந்து காளைகள் வெளியேறும்போது பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு எவ்வித காயமும் ஏற்படா வண்ணம் 2 அடுக்கு முறையில் உறுதியான மரத்தால் ஆன தடுப்பு காலரிகள் அமைக்கப்பட வேண்டும். இதன் உறுதி தன்மையை பொதுப்பணித்துறை(கட்டுமானம்) செயற்பொறியாளர்கள் நேரிடையாக தணிக்கை செய்து உறுதிதன்மை சான்று அளிக்கும் பட்சத்தில் மட்டுமே விழா நடத்த அனுமதிக்கப்படும்.
மருத்துவ சான்று
போட்டியில் பங்கு பெற உள்ள காளைகள், வீரர்கள் பெயர், முகவரி போன்ற விபரங்களை முன்னதாக மாவட்ட கலெக்டரிடம் வழங்க வேண்டும். அனைத்து காளைகளும் கால்நடை துறையினரிடம் முன்அனுமதி பெற வேண்டும். கால்நடைத்துறையினர், புகையிலை, மது, ஊக்க மருந்துகள் போதை வஸ்துகள் ஜல்லிகட்டில் பங்கேற்கும் காளைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்து, காளைகள் தகுதியுடையது என்பதற்கான சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். தகுதியற்ற காளைகள் என கண்டறியும் பட்சத்தில் அந்த காளைகள் எக்காரணத்தை கொண்டும் நிகழ்ச்சியில் அனுமதிக்கப்பட மாட்டாது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் மருத்துவரிடம் தகுதி சான்று பெற்ற பின்னரே கலந்து கொள்ளவேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவரும் மஞ்சள் நிறத்தில் கால்சட்டை, பனியன் ஆடைகள் அணிய வேண்டும். எக்காரணம் கொண்டும் மாற்று நிறம் கொண்ட உடை அணிந்து கலந்து கொள்ள கூடாது. விழாவுக்கு குறைந்தபட்ச தொகையான ரூ.2 லட்சமும், அல்லது ரூ.5 லட்சமும் கலெக்டரின் பெயரில் முன்வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
இந்த தொகை ஜல்லிக்கட்டின் போது காயமுறும் நபர்களுக்கும், இறக்கநேரிடும் நபர்களது வாரிசுதாரர்களுக்கும் வழங்கிடும் வகையில் பயன்படுத்தப்படும். மேற்படி அசம்பாவித சம்பவங்கள் நிகழாத பட்சத்தில் மட்டுமே மேற்படி தொகையானது விழா அமைப்பினருக்கு திருப்பி வழங்கப்படும்.
விதிமுறைகள் கடைப்பிடிக்க...
நிகழ்ச்சியில் பங்கேற்று காயமுறும் மற்றும் இறக்க நேரிடும் நபர்களுடைய வாரிசுதாரர்களுக்கு எக்காரணம் கொண்டும் அரசினால் நிவாரண தொகை வழங்க இயலாது. மேலும், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை ஆரம்பம் முதல் முடியும் வரை அனைத்து நிகழ்வுகளையும் விடுபடாமல் வீடியோவில் படம் பிடித்தும், அதனை 3 குறுந்தகடுகளில் பதிவு செய்து நிகழ்ச்சி முடிந்த பின்னர் மாவட்ட கலெக்டரிடம் கொடுக்க வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறுவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்தை பார்வையிட்டு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் மற்றும் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 27/2009 பிரிவு 7-ன்படி விழா அமைப்பினர் கடைப்பிடிக்கவில்லை என தெரியவரும் பட்சத்தில் ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதிகோரிய மனுவானது மாவட்ட கலெக்டரால் நிராகரிக்கப்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்திட அனுமதி வழங்கப்படமாட்டாது.
நடவடிக்கை
விழா அமைப்பினர் மாவட்ட கலெக்டரால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளில் அரசுக்கு 15 தினங்களுக்குள் மேல்முறையீடு செய்து கொள்ளலாம். கலெக்டரிடம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த அனுமதி பெறாமலோ அல்லது அனுமதிக்கப்படும் இடங்களில் நிகழ்ச்சி நாளன்று விழா அமைப்பினர் மேற்காணும் விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிகழ்ச்சி நடத்திட முற்படுகையில் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அமைப்பாளர்கள்/ பொறுப்பாளர்கள் மீது தமிழ்நாடு ஜல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம் 27/2009 பிரிவு 7-ன் படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டும், அவர்களுக்கு ஒரு வருட சிறைதண்டனை அல்லது ரூ.10 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ வழங்கப்படும்.
ஜல்லிகட்டு நிகழ்ச்சியினை காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் மட்டுமே நடத்த அனுமதிக்கப்படும். எக்காரணம் கொண்டும் மாலை 5 மணிக்கு மேல் நிகழ்ச்சியினை கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டாது.
மேற்கண்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு ஜல்லிகட்டு விழா நடத்த எழுத்து மூலமாக உறுதியளிக்கும் விழா அமைப்பினர்களுக்கு மட்டுமே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்திட உரிய அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
ஆலோசனை கூட்டம்
உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைப்படி ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றிய ஆலோசனை கூட்டம் நேற்று கலெக்டர் மகேசன் காசிராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஜாமுதீன், மாவட்ட வருவாய் அதிகாரி ராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மணிவண்ணன், கால்நடை பராமரிப்பு இணை இயக்குனர் ராஜேந்திரன், ஆர்.டி.ஓ.க்கள் ரகுநாதன், மகாலட்சுமி, தங்கவேல், ஜல்லிக்கட்டு அமைப்பாளர்கள் ஆறுமுகம், வீரபாகு, ஆரோக்கியராஜ், ஆரோக்கியசாமி, சிமியோன் ஆகியோர் கலந்து கொண்டனர்.