புதன்கிழமை, ஜனவரி 12, 2011, 14:04[IST]
http://thatstamil.oneindia.in/news/2011/01/12/50-birds-poisoned-death-vandalur-zoo-aid0091.html
சென்னை: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த வாரம் 25 பறவைகள் திடீர் என்று இறந்தன. அவைகளுக்கு உணவில் விஷம் வைத்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் ஏராளமான வனவிலங்குகளும், அரிய வகைப் பறவைகள், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பறவைகள் உள்ளன. ஆப்பிரிக்க கிளி, கொண்டைக்கிளி, தங்க நிறக்கோழி உள்ளிட்ட வெளிநாட்டுப் பறவைகளையும், வக்கா, சிறுகொக்கு, கூழைக்கடா, அரிவாள் மூக்கன் உள்ளிட்ட உள்நாட்டு பறைவைகளையும் சேர்த்து சுமார் 70 வகையிலான 700 பறவைகள் உள்ளன.
இவற்றில் நிலப்பறவைகள் ஐஸ்கிரீம் ஸ்டால் அருகேயுள்ள இடத்திலும், நீர்ப் பறவைகள் பாம்பு பண்ணை அருகே 4 கூண்டுகளிலும் வைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கு தினமும் உணவாக மீன்கள் வழங்கப்படுகின்றன. இதை ஒரு தனியார் நிறுவனம் சப்ளை செய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் ஒரே நேரத்தில் திடீர் என்று 25 பறவைகள் இறந்தன. பிரேத பரிசோதனையில் அவை நோயால் இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த வாரம் மீண்டும் 25 பறவைகள் திடீர் என்று இறந்தன. இவை உணவு குறைபாட்டால் இறந்திருக்க்ககூடும் என்று கூறப்படுகின்றது. உணவில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடத்தப்பட்ட பரிசோதனையில் பறவைகளுக்கு உணவில் நச்சுப் பொருள் கலந்து கொடுத்திருப்பதாக கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு உணவு வழங்க தனியார் கான்டிராக்டர்களுக்கிடையே உள்ள தகராறை பயன்படுத்தி விஷமிகள் இந்த காரியத்தை செய்திருக்கக்கூடும் என்று வனத் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து காவல் துறை அல்லது வனவிலங்கு துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறப்படுகின்றது.
பறவைகள் இறப்புக்கு பின்னால் விஷமிகள் இருக்கக்கூடும் என்பதை பூங்காத் தலைவர் கே. எஸ். வி. பி. பி. ரெட்டி மறுத்துள்ளார்.
இது குறித்து ரெட்டி கூறுகையில்,
பறவைகளுக்கு வழக்கமாக அருகில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து தான் மீன் பிடித்துக் கொடுக்கப்படும். ஏதாவது நச்சுத் தன்மை கொண்ட பொருட்கள் உணவுச் சங்கிலியில் கலந்து பறவைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியிருக்கக்கூடும். பல்வேறு வகைகளைச் சேர்ந்த 10 முதல் 15 பறவைகள் தான் இறந்துள்ளன. கால்நடை கல்லூரிக்கு இறந்த பறவைகள் சிலவற்றின் உடலை அனுப்பியிருக்கிறோம் என்றார்.
இது குறித்து விசாரணை நடத்தி விரைவில் அறிக்கை சமர்பிக்கப்படும் என்று சென்னை கால்நடை கல்லூரியின் பேராசிரியர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இதற்கிடையே சலிம் அலி மையத்திடம் உதவி கோரப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மத்திய அரசுக்கும் பூங்கா ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்