Pages

Thursday, January 20, 2011

சண்டைக்கு தயாராகும் கிடாக்கள்

சண்டைக்கு தயாராகும் கிடாக்கள்:இன்று முதலைக்குளத்தில் போட்டி

ஜனவரி 20,2011,23:47 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=170435

மதுரை:தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, கிராமங்களில் "கிடா முட்டு' பிரசித்தம். பல மாவட்டங்களில் இந்த விளையாட்டு அழிந்துவிட்ட நிலையில் மதுரை, தேனி மாவட்டங்களில் சில குறிப்பிட்ட கோயில் விழாக்களில் மட்டுமே இந்த விளையாட்டு நடக்கிறது.மதுரை மாவட்டம் முதலைக்குளத்தில் கம்பகாமாட்சி அம்மன் கருப்பசாமி கோயில் விழாவில் இன்று நடக்கும் கிடா முட்டில் 80 ஜோடி கிடாக்கள் பங்கேற்கின்றன.

ஜல்லிக்கட்டிற்கு உள்ள விதிமுறைகள் போன்று இந்த கிடா சண்டைக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. இப் போட்டியில் பங்கேற்க பல கிராமங்களில் கிடாக்களுக்கு கடும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.கிடாச்சண்டையில் நாட்டுக்கடா, பெங்களூரு குரும்பை ஆடுகள் தான் பங்கேற்கின்றன. பெங்களூரு குரும்பை மூன்று ஆண்டுகளாகத் தான் களத்தில் இறங்கி வருகின்றன. இதில் கருமறை, அணில்மறை, சாம்பல், இருசெல், சுத்தகுரும்பை என பல ரகங்கள். இதில் இருசெல் ரகம் சண்டையில் எப்படியும் ஜெயித்துவிடும் என்பதால் இதை தான் போட்டியாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.

இரண்டு மாத குட்டியின் விலை 5 ஆயிரம் ரூபாய். பல களங்களில் வென்றிருந்தால் இதன் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய். இதே போல் தான் நாட்டுக்கடா. இந்த ரகத்தை பல கிராமங்களில் பார்க்க முடியும். இதன் விலையும் 2 ஆயிரம் ரூபாயில் இருந்து தொடர்கிறது. இரும்புசோளம், உளுந்தம் குருணை, துவரம் குருணை, சுண்டல்கடலை, காணப்பயிறு, பால், முட்டை, அகத்திக் கீரை போன்றவை தான் இவற்றின் அன்றாட உணவு. பெங்களூரு குரும்பை ரகத்திற்கு இரண்டு மாதத்திற்கு ஒருமுறை முடிவெட்டுதல், வாரம் ஒரு முறை ஷாம்பு குளியல், மூன்று மாதத்திற்கு ஒரு முறை பூச்சி மருந்து, டாக்டர் ஆலோசனைப்படி டானிக் கொடுத்தல் என இதன் பராமரிப்பு முறையும் எளிதானது அல்ல.

மதுரை மாவட்டம் வேடர்புளியங்குளத்தில் பல கடாக்களுக்கு சண்டைப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த ஜெயக்குமார்(32) கூறியதாவது: எனது முழுநேர பொழுது போக்கும், தொழிலும் இந்த ஆடுகள் தான். மூன்று ஆண்டுகளாக இப்போட்டிகளில் எனது "மொட்ட கருப்பு நெத்திவெள்ளை' (பெங்களூரு குரும்பை) பங்கேற்கிறது. போட்டிகளில் பெருமையை தேடித்தரும் இதற்கு நாட்டுக் கடாக்களுடன் மோத வைத்து சிறப்பு பயிற்சி அளிப்பதுடன், தினமும் நான்கு கிலோ மீட்டர் நடைபயணம், இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீச்சல் பயிற்சி மற்றும் காய்ந்த மரங்களில் மோதும் பயிற்சிகள் அளிக்கிறேன். குட்டியில் இருந்து இரண்டு பல் வரும் வரை நாம் சொல்வது போல் கேட்கும். அதன் பின் "வளர்த்த கடா மார்பில் பாய்ந்ததடா' என்பது போன்று தான் இவற்றின் செயல்பாடுகள் இருக்கும். சண்டைக் களத்தில் கொண்டு சென்று விட்டால், நமது உத்தரவிற்காக காத்திருந்து மோதும். அப்போது மட்டும் எஜமான விசுவாசம் காட்டி, எதிர்கடாவை தோற்கடிக்கும். நமக்கும் பெருமை தேடித் தரும்'', என்றார்.

ஜெயகுமாரின் தந்தை முத்துசாமி கூறுகையில், "" சண்டைக் களத்தில் இப்போது புதிய விதிமுறைகளின் படி ஒரு ஜோடி 50 முறை மோதும். இதில் கொம்பு முறிதல், தலை உடைதல், சம்பவ இடத்திலேயே பலியாதல் போன்றவையும் நடக்கும். இரு கடாவும் சோர்வு இல்லாமல் கடைசிவரை களத்தில் நின்றால் இரண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். கடந்த காலங்களை போன்று இல்லாமல் இப்போது உள்ள புதிய விதிமுறைகள் சிறப்பாக உள்ளது'', என்றார்.

தமிழக கிராமங்களில் காணாமல் போன பல விளையாட்டுகளின் பட்டியலில் இந்த "கிடா முட்டும்' இடம் பெற்றுள்ளது. போட்டிகளின் கட்டுப்பாடு, பரிசு தொகை குறைவு, பராமரிப்பு செலவு அதிகரிப்பு, ஊக்கப்படுத்துதல் இல்லாத நிலை போன்ற பல காரணங்களால் இருந்தாலும், பல கிராமங்கள் இன்னும் இந்த விளையாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளது சிறப்புக்குரியது