Pages

Wednesday, January 26, 2011

இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் காரைக்காலில் தொடர்வதால் பீதி


ஜனவரி 26,2011,22:41 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=174534


காரைக்கால் : காரைக்கால் கடற்கரையில் சமீப காலமாக டால்பின் மற்றும் கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. காரைக்கால் அரசலாற்று முகத்துவாரத்தின் அருகே, கடலில் இருந்து 200 மீட்டர் தூரத்திற்கு மணல்பரப்பு நிறைந்து இருப்பதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். ஆனால், சமீபகாலமாக காரைக்கால் கடற்கரையில், கடல் வாழ் உயிரினங்களான டால்பின் மற்றும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குகின்றன.
கடந்த 15 தினங்களுக்கு முன், 3 அடி நீளமும், 50 கிலோ எடை கொண்ட பெரிய ஆமை ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இரண்டு நாட்கள் கழித்து, அதே அளவிலான மேலும் ஒரு ஆமை இறந்து கரை ஒதுங்கியது. கடந்த வாரம், 6 அடி நீளமும், 200 கிலோ எடை கொண்ட டால்பின் ஒன்றும் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.

இந்நிலையில், நேற்று மீண்டும், 30 கிலோ எடையும், 3 அடி நிளம் கொண்ட ஒரு ஆமை இறக்கும் தருவாயில் கடற்கரையில் ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆமையை, கடற்கரையில் குளித்து விளையாடிய சிறுவர்கள், விளையாட்டுப் பொருள் போல தூக்கிப் போட்டு விளையாடினர். ஆமையை கடலில் விட பொதுமக்கள் வலியுறுத்தியதை அடுத்து, கடலில் விடச் சென்றபோது, ஆமை பரிதாபமாக இறந்தது.

காரைக்கால் கடற்கரையில் சமீப காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்து கரை ஒதுங்கி வருவது பொதுமக்கள் இடையே பீதியை கிளப்பி உள்ளது. கடலில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்படி நிகழ்கிறதா அல்லது கடலில் ரசாயனங்கள் கலந்துவிட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் மற்றும் டால்பின்கள் அகற்றப்படாமல் பல நாட்களாக கடற்கரையிலே கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.