Pages

Saturday, December 10, 2011

மடத்துக்குளம் அருகே இலவச ஆடுகள் பலி


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364145
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,00:26 IST

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கடத்தூரில் அரசு வழங்கிய இலவச ஆடுகள் தொடர்ந்து இறந்து வருவதால் பொது மக்களிடையே பீதி எற்பட்டுள்ளது. தமிழக அரசு வழங்கி வரும் இலவச திட்டத்தில் ஆடுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது கிராம ஊராட்சிகளில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு இலவச ஆடுகள் வழங்கப்படுகிறது. மடத்துக்குளம் ஒன்றியத்தில் கடத்தூர் புதூர் பகுதியில் 18 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச ஆடுகள் வழங்கப்பட்டன.பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆடுகள் கடந்த வாரம் முதல் தொடர்ந்து இறந்து வந்துள்ளன. நேற்று இரவு வரை கடத்தூரில் மட்டும் ஆறு ஆடுகள் இறந்துள்ளன. இதனால் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பயனாளிகள் கூறியதாவது: என்ன காரணத்தினால் ஆடுகள் இறக்கின்றன என தெரியவில்லை. தொடர்ந்து ஆடுகள் இறப்பதால் புதியவகை நோய் இந்த பகுதியில் பரவியுள்ளதோ என அச்சமடைந்துள்ளோம். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்துக்கு கடந்த வாரத்தில் முதல் ஆடு இறந்த உடனேயே தகவல் கொடுத்துள்ளோம். ஆனால் இது வரை ஆடுகள் இறப்பு குறித்து மருத்துவசோதனை எதுவும் நடத்தவில்லை. இறந்த ஆடுகளை தொடர்ந்து புதைத்து வருகிறோம். மீதமுள்ள ஆடுகளை காப்பாற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது: ஆடுகளுக்கு வழங்க வேண்டிய மருந்துகள் மற்றும் பாதுகாப்பு குறித்து அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் தொடர்ந்து ஆடுகள் இறந்து வருவது குறித்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாக்கி உள்ள ஆடுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றனர்.

இது குறித்து கடத்தூர் ஊராட்சி தலைவர் ராசு கூறியதாவது: தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள், மருத்துவ வசதிகள் இருந்தும் அரசு வழங்கிய இலவச ஆடுகள் இறந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இது குறித்து ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.மடத்துக்குளம் ஒன்றியக்குழு தலைவர் அண்ணாதுரை கூறுகையில், ""ஆடுகள் இறந்தது வருத்தமானது தான். இதுகுறித்து உரிய துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கப்படும்'' என்றார்.