http://www.dinamalar.com/News_Detail.asp?Id=364850
பதிவு செய்த நாள் : டிசம்பர் 09,2011,23:43 IST
கோவை:கோவை அருகே, க.க.சாவடி பகுதியில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் நேற்று திடீரென செத்து விழுந்தன. அதிர்ச்சியடைந்த போலீசார், அருகேயுள்ள ஓட்டல்களில் விசாரணை நடத்தினர்.க.க.சாவடி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில், நேற்று பிற்பகலில் பறந்து சென்ற காகங்கள் சில, தடுமாறி கீழே விழுந்தன. அவற்றால் எழுந்து நிற்கக் கூட முடியவில்லை. சற்று நேரத்திலேயே கால்களை இழுத்தபடி இறந்தன. தொடர்ந்து, இப்பகுதியில் பறந்து சென்று கொண்டிருந்த மேலும் பல காகங்கள், இதே போல் ஆங்காங்கே விழுந்தன. விழுந்த சில வினாடிகளில் இறந்தும் விட்டன.
இறக்கும் முன், வாயில் இருந்து வெள்ளையாக எதையோ கக்கி விட்டு, வாய் திறந்த நிலையில் அப்படியே இறந்தன. கொத்து கொத்தாக, 200க்கும் மேற்பட்ட காகங்கள், ஒரே நேரத்தில் இறந்து விழுந்த தகவலை அறிந்த க.க.சாவடி போலீசார், அங்கு வந்தனர்.பள்ளி வளாகம், தோட்டம், சாலை, புதர்களில் செத்து விழுந்திருந்த காகங்களை, இப்பகுதி மக்களின் துணையுடன் அள்ளி ஓரிடத்தில் குவித்தனர். அருகில் உள்ள ஓட்டல்களில் சோதனை நடத்தினர். பரிசோதனைக்காக அதில் ஒரு சில காகங்களின் உடலை அனுப்பி வைத்தனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில், ""இவ்வளவு காகங்கள் ஒரே நேரத்தில் செத்து விழுவது இதுவே முதல் முறை. இறப்புக்கான காரணம் மர்மமாகவே உள்ளது. ஏதாவது விவசாயத் தோட்டத்தில் பூச்சி மருந்து கலந்த தண்ணீரை குடித்திருக்கலாம் அல்லது சாலைகளில் கொட்டப்படும் மருத்துவ, ரசாயன கழிவுகளை சாப்பிட்டிருக்கலாம். இதைத் தவிர, இவ்வளவு காகங்களை எவரும் கொல்ல வேண்டிய அவசியம் இல்லை,'' என்றனர்.காகங்களின் மர்ம மரணத்தின் பின்னணி குறித்து இப்பகுதியில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.