http://www.dinamalar.com/News_Detail.asp?Id=365309
பதிவு செய்த நாள் : டிசம்பர் 10,2011,23:22 IST
புதுச்சேரி : ஏரிப் பகுதியில், சரமாரியாக குண்டுகளை வெடிக்கச் செய்து பறவைகளை விரட்டியடித்து, சினிமா படப்பிடிப்புக் குழுவினர் நடத்திய அடாவடி, இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒன்றியம், கூனிமேடு அடுத்த கழுவெளி ஏரியில், மிகப் பெரிய உப்புநீர் கழிமுகப் பகுதி அமைந்துள்ளது. கோடியக்கரை மற்றும் இலங்கைக்கு ஆண்டுதோறும் வலசை செல்லும் பறவை இனங்கள், கழுவெளியில் இளைப்பாறி விட்டு செல்லுகின்றன. கழுவேலி ஏரியில் 120க்கும் மேற்பட்ட பறவையினங்கள் லட்சக்கணக்கில் முகாமிட்டுள்ளன. பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால், வனச் சரணாலயமாக அறிவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில், கழுவெளி பகுதிக்குள் நேற்று காலை 7 மணிக்கு அத்துமீறி நுழைந்த, "வாடாமலர்' சினிமா படப்பிடிப்புக் குழுவினர், 2 கி.மீ., தொலைவிற்கு போக்குவரத்தை தடை செய்தனர். அந்த பகுதிக்குச் சென்ற உள்ளூர் மக்களிடம் கெடுபிடி செய்து விரட்டியடித்தனர். ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சண்டைக் காட்சிகளை படப்பிடிப்புக் குழுவினர் படமாக்கினர். இதற்காக அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. அமைதி குலைந்ததால், அதிர்ச்சியில் கழுவெளியில் முகாமிட்டிருந்த கூழைக்கடா, பூநாரை, கொக்கு, கடற்காகங்கள், உள்ளான், மடையான் உள்ளிட்ட பறவைகள் அந்த பகுதியை விட்டு பறந்தோடின.
இதையறிந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், இயற்கை ஆர்வலர்கள் அங்கு திரண்டனர். "இந்த பகுதியில் பறவைகள் உள்ளதால், குண்டு வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்த வேண்டும்' என கேட்டுக் கொண்டனர். ஆனால், சினிமா படப்பிடிப்பு குழுவினர், எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களுக்கு மிரட்டல் விடுத்து, சினிமா படப்பிடிப்பு குழுவினர் விரட்டியடித்தனர். செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களையும் அந்த கும்பல் விட்டு வைக்கவில்லை.
"நாங்கள் இப்படித்தான் படப்பிடிப்பு நடத்துவோம்... எங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது... எடுத்த படத்தை டெலிட் செய்து விடு...' என, படத்தின் டைரக்டர் ஆனந்தராஜன், மிரட்டல் விடுத்து கேமராவை பறிக்க முயன்றார்.
இன்னொரு கும்பல், "பத்திரிகையாளர்களை வீடியோ எடுத்ததுடன், போட்டோகிராபரிடம் இருந்த அடையாள அட்டையை பிடுங்கிச் சென்றது. இதை கேள்விப்பட்ட நடிகர் நந்தா, "இப்பகுதியில் பறவைகள் இருப்பது எங்களுக்குத் தெரியாது. குண்டுகள் வெடிக்காமல் படப்பிடிப்பு நடத்துகிறோம். டைரக்டர் செய்த செயலுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' எனக் கூறி, போட்டோகிராபரிடம் பிடுங்கப்பட்ட அடையாள அட்டையை மீண்டும் ஒப்படைத்தார். அதேசமயம், மீண்டும் மீண்டும் குண்டுகளை வெடித்து, சினிமா படப்பிடிப்பு தொடர்ந்து நடத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த பறவை ஆராய்ச்சியாளர்கள், மரக்காணம் போலீஸ் ஸ்டேஷனிலும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். விசாரணை நடத்திய மரக்காணம் போலீசார், அனுமதி பெறாததால் படப்பிடிப்பை தடுத்து நிறுத்தினர்.
வனத்துறை அதிகாரி அண்ணாதுரை கூறும்போது, "கழுவெளியை ஒட்டியுள்ள பகுதிகளில் பறவைகளுக்கு இடையூறாக சினிமா படப்பிடிப்பு நடத்தக்கூடாது. அதை மீறி அனுமதியில்லாமல் சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
அனுமதியின்றி படப்பிடிப்பு
சினிமா படப்பிடிப்பு நடத்த வேண்டும் என்றால் சுற்றுச்சூழல், வனத்துறை, சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனிலும் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அப்படி எந்த அனுமதியும் இல்லாமல், பறவைகள் முகாமிட்டுள்ள பகுதியில் அத்துமீறி நுழைந்து, சினிமா படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கூனிமேடு ஊராட்சியில் 7,000 ரூபாய் செலுத்தி முன் அனுமதி மட்டுமே பெறப்பட்டுள்ளது. இதில், பறவைகளை தொந்தரவு செய்ய மாட்டோம், குண்டு வெடிக்க மாட்டோம் என எந்த உறுதிமொழியும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.