http://www.dinamalar.com//News_Detail.asp?Id=357614&
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011,02:07 IST
ஜோத்பூர்: ராஜஸ்தானில் அரியவகை சிங்காரா மான்களை வேட்டையாடி சமையல் செய்ததாக 5 ராணுவ வீரர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் நேற்று அவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாயினர். ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள நீம்பாலா வனப்பகுதியில் ராணுவ தளவாடத்தொழிற்சாலையில் பணியாற்றிய ராணுவ வீரர்கள் சிலர் கடந்த 25-ம் தேதி சிங்காரா மான்களை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வனத்துறை புகார் தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து 5 ராணுவீரர்கள் மீது வழக்குப்பதியப்பட்டு அவர்களிடம் 3 மான்களின் தலைகள் மற்றும் மான்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக வனத்துறை அதிகாரி பி.ஆர்.பஹாதி, ராணுவ கோர்டில் 5 ஜவான்களையும் விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். முன்னதாக அவர்கள் மீது இந்திய வன உயிரினங்கள் பாதுகாப்புச்சட்டம் 1972-ன் 9 ம்ற்றும் 51பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நேற்று வனத்துறையினரின் விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டிருந்தது.
ஆனால் அவர்கள் 5 பேரும் ஆஜராகவில்லை. இவர்கள் வனத்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல்.எஸ்.டி. கோஸ்வாமி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து ராணுவ தலைமையகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் அவர்களிடமிருந்து சமைப்பதற்காக வைத்திருந்த மூன்று மான் தலைகள் கைப்பற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் இவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை உறுதி. இதனால் அவர்கள் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என்றார்.