பதிவு செய்த நாள் : டிசம்பர் 13,2011,23:13 IST
http://www.dinamalar.com/News_detail_ban_exclu.asp?Id=367026
"முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை போலவே, மிருக வதை சட்டத்தின் கீழ் யானைகளை சேர்க்காமல், ஜல்லிக்கட்டு காளைக்கு மட்டும் தடை விதித்ததற்கு, கேரளா மீதான பாசம் தான் காரணம்' என, மத்திய அரசின் மீது, தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு பரபரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
தமிழ்நாடு ஜல்லிக்கட்டுக் குழு மாநில நிறுவனர் அம்பலத்தரசு கூறியதாவது: கடந்த 1960ம் ஆண்டு, மிருக வதைச் சட்டத்தின்கீழ், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை, காட்சிப் பொருளாக அடைத்து வைத்து வித்தை காட்டுவதை, மத்திய அரசு தடை செய்தது. தற்போது,
இச்சட்டத்தை விரிவு செய்து, "ஜல்லிக்கட்டில் காளைகள் வதை செய்யப்படுகின்றன' என, உண்மைக்கு புறம்பாகக் கூறி, ஜல்லிக்கட்டு காளைகளையும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் இப்பட்டியலில் சேர்த்துள்ளார். அதன்படி, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து, 2011 ஜூலை 11ம் தேதி, ஆணை பிறப்பித்துள்ளார். கேரளாவில், வெளி மாநில, வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், யானைகளை வைத்து, பல்வேறு வித்தைகள் காட்டப்படுகின்றன.
சாகச நிகழ்ச்சிகளின்போது, யானைகளுக்கு மதம் பிடித்து, பார்வையாளர்கள், பாகன்களை துதிக்கையால் தூக்கி எறிந்து, கால்களால் மிதித்து
, துவம்சம் செய்வது தொடர் கதையாக இருக்கிறது. யானைகளை காக்க, ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத மத்திய அரசு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மட்டும் தடை செய்வதில், மிகுந்த ஆர்வம் காட்டுகிறது.
கேரள மாநிலத்தின் கலாசாரத்தைக் காக்க, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உயர் அதிகாரிகளாக உள்ள கேரளாவைச் சேர்ந்தவர்கள், யானைகளை இப்பட்டியலில் சேர்க்க, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே, யானைகளை இப்பட்டியலில் சேர்க்கவில்லை. ஜல்லிக்கட்டு காளைகளை மட்டும் இப்பட்டியலில் சேர்த்தது, மத்திய அரசின் கேரள பாசத்தை, அப்பட்டமாக படம் பிடித்து காட்டுகிறது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில், ஒரு தாய் மக்களாக ஒன்று திரண்டு போராடும் தமிழக மக்கள், ஜல்லிக்கட்டு விஷயத்திலும், மத்திய அரசுக்கு நமது எதிர்ப்பை பலமாக பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விளையாட்டை மீட்க வேண்டும். இவ்வாறு, அம்பலத்தரசு கூறினார்.