பதிவு செய்த நாள் : பிப்ரவரி 28,2012,23:10 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=415732
வேலூர் : வேலூர் அருகே நாய் இறந்த சோகத்தில், திருமணத்தை மணப்பெண் நிறுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் அடுத்த தக்கோலம் அருகே, அரிகலபாடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நாராயண மூர்த்தி. இவரின் மகள் காயத்ரி,24. பி.ஏ., பட்டதாரியான இவருக்கும், சென்னையை சேர்ந்த மணிவண்ணன் மகன் தரணி,26,க்கும், கடந்த மாதம் 10ம் தேதி, திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இருவரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதால், மிகவும் எளிமையாக காயத்ரி வீட்டில், திருமணம் செய்ய முடிவு செய்தனர். இவர்கள் திருமணம், நேற்று (பிப்., 28 ) காலை, 10 மணிக்கு நடப்பதாக இருந்தது.இதற்காக, உறவினர்கள் காயத்ரி வீட்டுக்கு வந்திருந்தனர். காயத்ரி செல்லமாக வளர்த்து வந்த மணி என்ற நாய்க்கு, நேற்று முன்தினம் இரவு, திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.அரக்கோணத்தில் இருந்து கால்நடை மருத்துவர் பாலசுப்பிரமணியம், நாய்க்கு சிகிச்சை அளித்தார். மூன்று மணி நேரத்துக்கு பின், நாய் பழையபடி நடமாடும் எனக் கூறி விட்டு, மருத்துவர் சென்றார்.
அதனால், நேற்று திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. காலை, 9 மணிக்கு திடீரென நாய்க்கு, மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சிறிது நேரத்தில் இறந்தது. சோகம் தாங்காமல் காயத்ரி அழுது துடித்தார்.இதனால், குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்தை நடத்த முடியவில்லை. நாயை ஒரு அறையில் வைத்து விட்டு திருமணம் நடத்தலாம் என்றும், திருமணம் முடிந்த பின், அடக்கம் செய்யலாம் என்றும், காயத்ரி வீட்டார், யோசனை தெரிவித்தனர்.இதற்கு, காயத்ரி சம்மதிக்கவில்லை.
""நான் பல ஆண்டுகள் செல்லமாக வளர்த்த நாய் மணியே இறந்துவிட்டது. இதனால், என் சந்தோஷம் அனைத்தும் போய்விட்டது. எனக்கு திருமண வாழ்க்கை தேவையில்லை'' எனக் கூறிவிட்டார். இரு தரப்பு உறவினர்கள் சமாதானம் செய்தும், காயத்ரி திருமணத்துக்கு சம்மதிக்கவில்லை.இதனால், மணமகன் வீட்டார் சோகத்துடன் திரும்பிச் சென்றனர். இறந்த நாய், அங்குள்ள சுடுகாட்டில், மதியம் 3 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.