Pages

Friday, November 25, 2011

நண்பேன்டா...! டீ மாஸ்டருடன் விளையாடும் அணில்: ஆச்சர்யப்பட வைக்கும் பாசப் பிணைப்பு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=354769
பதிவு செய்த நாள் : நவம்பர் 24,2011,01:17 IST

விழுப்புரம் : விழுப்புரத்தில், ஒரு டீ கடைக்காரருடன் விளையாடியபடி நட்புடன் பழகி வரும் அணிலின் பாசப் பிணைப்பு, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம், கணபதி நகரை சேர்ந்தவர் வேல்முருகன். திருச்சி நெடுஞ்சாலையில் மகளிர் கல்லூரி எதிரே, டீ கடை வைத்துள்ளார். எப்போதும் இவருடன் விளையாடிக் கொண்டிருக்கும் அணிலைப் பார்த்து, கடைக்கு வரும் மக்கள் ஆச்சர்யப்படுகின்றனர்.பங்க் கடையில் விற்பனை, டீ போடும் போதும், அவரது தோளிலும், கைகளிலும் திரிந்தபடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த அணில். கண்ணில் பட்டவுடன் ஓடிவிடும் சுபாவம் கொண்ட அணில், ஒருவருடன் நட்புறவாக ஒட்டிக்கொண்டுள்ளது, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறது.அவர் கொடுக்கும் உணவுகளை சுவைத்தபடி சுற்றி வரும் அந்த அணில், டீ கடை மேல் கூரை, பங்க் கடை பகுதிகளில் உலவுகிறது, காஞ்சன் என செல்லமாக அவர் அழைத்த குரலுக்கு, உடனே ஓடி வந்து, அவர் தோள் மீது உட்கார்ந்து விளையாடுகிறது. அவருடன் சண்டை கூட போடுகிறது.

அணிலுடன் ஏற்பட்ட நட்பு குறித்து வேல்முருகன் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களுக்கு முன், கடையின் அருகே இருந்த மரத்தின் கூட்டிலிருந்து, இந்த அணில் குஞ்சு கீழே விழுந்து கிடந்தது. கண் திறக்காமல் இருந்த அணில் குஞ்சை எடுத்து, பால் வாங்கி ஊற்றி வளர்த்தேன்.பால், பிஸ்கட், சாதம் ஆகியவற்றை உணவாகக் கொடுத்து வந்தேன். அணில் என்னுடனே ஒட்டிக் கொண்டது. காலையில் கடை திறந்தவுடன், என் மீது அமரும். மாலை இருள் சூழ்ந்தவுடன், 6 மணிக்கு, கடையின் உள்ளே சென்றுவிடும்; வெளியே வராது. மறு நாள் காலை கடையைத் திறந்தவுடன், என்னுடன் வந்துவிடும்.பால், பிஸ்கட், சாதம், வறுகடலை, மணிலா பயிறு வடை என, நான் கொடுப்பது அனைத்தையும் சாப்பிடும். சிக்கன், மட்டன், மீன் உணவையும் இது ருசித்துள்ளது. நான் டீ போடும் போதும், விற்பனை செய்யும் போதும், என் மீது விளையாடிக் கொண்டிருக்கும். எந்த பொருளையும் வீணடிக்காது; நான் கொடுப்பதை மட்டுமே சாப்பிடும்.மற்றவர்கள் மீது விட்டால், நுகர்ந்து பார்த்து விட்டு, உடனே திரும்பி என் மீது ஒட்டிக் கொள்ளும். நான் வெளியூர் செல்லும் போதும், என்னுடன் பைக்கில் பலமுறை பயணித்துள்ளது. உறவினர் திருமணத்திற்கு வெளியூர் சென்ற போது, என் பாக்கெட்டினுள் பயணித்து, திரும்பி வந்துள்ளது.இவ்வாறு வேல்முருகன் கூறினார்.இந்த பாசப் பிணைப்பை பொதுமக்கள் பலரும் பாராட்டிச் செல்கின்றனர்.