Pages

Friday, November 25, 2011

எலியைப் பிடித்தால் சன்மானம்: நாய்பிடிக்க இலவச பயிற்சி:மாநகராட்சி புது முயற்சி

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=355361
பதிவு செய்த நாள் : நவம்பர் 25,2011,00:37 IST

சென்னை: சுதந்திரமாக உலா வரும் எலி, நாய்களை பிடித்துக் கொடுத்தால், சன்மானமாக பணம் தரப்படும் என, மாநகராட்சி அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளோருக்கு எலிப்பிடிக்க பயிற்சியும் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில், தெருநாய்களின் ஆதிக்கம் மட்டுமல்ல, எலி மற்றும் பெருச்சாளிகளின் தொல்லை, அதிகமாகவே உள்ளது. தெரு நாய் கடியால் "ரேபிஸ்' நோய் பரவும் என்பதால், அவற்றைப் பிடித்து இனப்பெருக்கக் கட்டப்பாடு அறுவைச் சிகிச்சை செய்து, ரேபிஸ் தடுப்பூசி போட்டு, பிடித்த பகுதியிலேயே கொண்டு போய் விடும் பணியை, மாநகராட்சி செய்து வருகிறது. பேசின்பாலம் சாலையில், நாய் இனப்பெருக்கக் கட்டுப்பாடு மையம் செயல்படுகிறது. புகார்களின் அடிப்படையில், தெருநாய்கள் பிடித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. நாய் பிடிக்கும் வாகனங்கள் ஆறும், இதில் நிரந்தர பணியாளர்கள் நான்கு பேரும், ஒன்பது தனியார் தொழிலாளர்களும் உள்ளனர். சராசரியாக மாதத்திற்கு, 1,200 நாய்கள் வரை பிடிக்கப்படுகின்றன.

எலி மற்றும் பெருச்சாளிகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்த, கிடங்குகள், காய்கறி அங்காடிகள், உணவு விடுதிகள், குப்பை கொட்டும் இடங்களில் எலியை ஒழிக்க விஷம் வைக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. தெரு நாய்கள் மற்றும் எலி, பெருச்சாளிகளைக் கட்டுப்படுத்த, பொது நோக்குடைய தனியாரை பயன்படுத்த, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இவை தொடர்பான மாநகராட்சி அறிவிப்புகள்:

நாய் பிடிக்க இலவச பயிற்சி:
* தெரு நாய் பிடிக்கும் பணியில் ஈடுபடும் தனியாருக்கு, நாய் ஒன்றுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை, 25 ரூபாயிலிருந்து, 50 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
* தன்னார்வமுள்ளவர்களுக்கு, நாய் பிடிக்கும் பயிற்சி இலவசமாக வழங்கப்படும். அவர்கள் பிடிக்கும் நாய்களுக்கு, 50 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
* தன்னார்வம் கொண்டவர்கள் பிடித்துக் கொடுக்கும் பெருச்சாளி, மற்றும் நகர எலிகளுக்கு, எண்ணிக்கை அடிப்படையில், ஊக்கத்தொகை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த, "கிரேட்டர்' சென்னையில் முதல் கூட்டத்தில், இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது.