பதிவு செய்த நாள் : ஜூன் 07,2011,23:19 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=253736
தூத்துக்குடி : ""மன்னார் வளைகுடா தீவுகளை, சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் இல்லை,'' என, மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக இயக்குனர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்தார். தூத்துக்குடியில், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் சார்பில், அரிய உயிரினமான கடல் பசு, அதன் வாழ்விடங்களை காப்பது குறித்து, இரண்டு நாள் தெற்காசிய கருத்தரங்கம் நடந்தது. அதில் கலந்து கொண்ட உயரதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள், நேற்று படகில் வான்தீவு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் ஆய்வு நடத்தினர்.
பின், மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக இயக்குனர் சேகர் குமார் நீரஜ் கூறியதாவது: மன்னார் வளைகுடா, 1986ல், தேசிய கடல் பூங்காவாகவும், 1989ல், உயிர்கோள காப்பகமாகவும் அறிவிக்கப்பட்டது. இதில் ராமநாதபுரத்தில் துவங்கி, தூத்துக்குடி வழியாக குமரி வரை, 10,500 சதுர கிலோ மீட்டரில் 21 தீவுகள் இருந்தன. அவற்றில் இரண்டு தீவுகள் கடலில் மூழ்கின. வான்தீவு, 115 எக்டேரில் அமைந்துள்ளது. கடல் அரிப்பு காரணமாக, இத்தீவின் பரப்பும் குறைந்து வருகிறது.
எட்டு ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் பவளப் பாறைகள் சட்டவிரோதமாக வெட்டி எடுத்து கடத்தப்பட்டன. தடை செய்யப்பட்ட பின், பவளப்பாறைகள் வெட்டியெடுக்கப்படுவது இல்லை. மீன்களின் உறைவிடமான பவளப்பாறைகளை வளர்க்கும் பணி ஆறு தீவுகளில் நடந்து வருகிறது. மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றுலாத்தலமாக்கும் திட்டம் இல்லை. பொதுமக்கள் இப்பகுதிக்கு வந்து வண்ண மீன்களை கண்டு ரசிப்பதற்காக, கண்ணாடிப் படகு இயக்கும் திட்டம், பரிசோதனை அடிப்படையில் ராமேஸ்வரத்தில் நடைமுறையில் உள்ளது. இவ்வாறு சேகர் கூறினார்.