பதிவு செய்த நாள் : ஜூன் 09,2011,03:08 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=254698
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே வனத்துறையின் அலட்சியத்தால் மான்கள் நாய்களுக்கு இரையாகி வரும் பரிதாப நிலை தொடர்கிறது. விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை வன சரகத்திற்குட்பட்டு 5,000 ஏக்கர் பரப்பளவில் காப்பு காடுகள் உள்ளன. இப்பகுதியில் அதிகளவில் மான்கள் உள்ளன. சில வகை மயில், நரி, காட்டு பன்றிகளும் உள்ளன. ஆனால் வன சரகத்தின் சார்பில் இந்த வன விலங்குகளுக்கு எந்தவித பாதுகாப்பு வசதிகளும் செய்யப்படவில்லை. வன பகுதியில் குடிநீர் வசதி கூட செய்து தராததால், கோடை காலத்தில் தண்ணீரை தேடி கிராம மக்கள் வசிக்கும் பகுதிக்கு அதிகளவில் வருகின்றன. இதனால் நாய்களிடமும், வாகனங்களிலும் மான்கள் சிக்கி உயிரைவிடும் சம்பவங்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றன. நேற்று காலை பாண்டூர் காப்பு காட்டு பகுதியில் இருந்து ஆண் புள்ளி மான் ஒன்று தண்ணீரை தேடி உ.கீரனூர் கிராம ஏரிக்கு வந்தது. அங்கு வந்த நாய்கள் மானை விரட்டி கடித்து குதறியதில் பரிதாமாக இறந்தது. இது போல் கடந்த சில மாதங்களுக்கு முன் வண்டிப்பாளையம் கிராமத்திற்கு தண்ணீரை தேடி வந்த மானை நாய்கள் கடித்ததால் இறந்தது. கடந்தாண்டு கூ.கள்ளக்குறிச்சியில் தண்ணீரை தேடி வந்த மான் வாகனம் மோதி இறந்தது. எறைஞ்சி பகுதியில் அதிகளவில் மான்கள் தண்ணீரை தேடி வந்து விளைச்சலை பாதிப்பு ஏற்படுத்தி வருவதாக விவசாயிகள் கலெக்டரிடம் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் இது வரை வன அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. வன அதிகாரிகளின் இந்த அலட்சியபோக்கால் உளுந்தூர்பேட்டை வன காப்பு காட்டில் மான்கள் அழித்து வரும் போக்கு அதிகரித்து வருகிறது. கோடை காலங்களில் தண்ணீரை தேடி மான்களை உயிரிழப்பதை தடுக்க வன அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுப்பது அவசியம்.