பனப்பாக்கம் அருகே ஏரியில், லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன
விஷம் கலக்கப்பட்டதா? போலீஸ் விசாரணை
பனப்பாக்கம், ஜுன்.29-
http://dailythanthi.com/article.asp?NewsID=656341&disdate=6/29/2011&advt=2
பனப்பாக்கம் அருகே ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்தன. ஏரியில் விஷம் கலக்கப்பட்டதால் இது நடந்ததா? என்று, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஏரியில் மீன் வளர்ப்பு
வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர் கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அந்த ஏரியில் எப்போதும் தண்ணீர் நிறைந்திருக்கும். அந்த ஏரியை, அதே கிராமத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் ஒரு ஆண்டு காலத்திற்கு குத்தகைக்கு எடுத்திருந்தார்.
அவர் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, வாலாஜா அருகே உள்ள ஒரு தனியார் மீன் பண்ணையில் இருந்து சுமார் 85 ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கி வந்து, அந்த ஏரியில் விட்டு வளர்த்து வந்தார். நாளடைவில் குஞ்சுகள் வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து, லட்சக்கணக்காக பெருகின. ஜிலேபி, கட்லா, ரோகு, சீசீ, புல்கந்த், கண்ணாடி போன்ற பலவகை மீன்கள் ஏரியில் இருந்து வந்தன.
செத்து மிதந்தன
தனசேகரன் தினமும் காலையில் வந்து, ஏரியில் இருந்து பெரிய மீன்களை பிடித்து விற்பனை செய்வது வழக்கம். நேற்று காலை 6 மணியளவில் தனசேகரன் வழக்கம்போல் தனது நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்காக ஏரிக்கரைக்கு வந்தார். அப்போது, ஏரியில் இருந்த மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
சிறிய மீன் குஞ்சு முதல், சுமார் 2 கிலோ எடை வரை உள்ள லட்சக்கணக்கான மீன்கள் கரையில் ஒதுங்கி கிடந்தன. உடனே ஊருக்குள் சென்று, அதுபற்றி கிராம மக்களுக்கு தகவல் கொடுத்தார். கிராம மக்கள் திரண்டு வந்து, ஏரியில் மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்ததை பார்த்து வருத்தம் அடைந்தனர்.
பரிசோதனைக்கு
பின்னர் இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கும், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும், நெமிலி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் மதியரசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், கிராம நிர்வாக அதிகாரி குப்புராமன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஏரிக்கரைக்கு வந்தனர்.
அவர்கள் ஏரியில் செத்து மிதந்த மீன்களை பார்வையிட்டு, அவை இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மீன்கள் செத்ததற்கான காரணத்தை அறிவதற்காக, ஏரி தண்ணீரை 2 பாட்டில்களில் சேகரித்தனர். அவை பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
விஷம் கலப்பா?
விரோதம் காரணமாக விஷமிகள் யாரேனும் ஏரி தண்ணீரில் விஷம் கலந்து விட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் மீன்கள் செத்து மிதந்தனவா? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மேலும், செத்து மிதந்த மீன்கள் அனைத்தையும் சேகரித்து, அதே ஏரிக்கரையில் புதைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இளைஞர்கள் காவல்
ஏரி தண்ணீரின் பரிசோதனை அறிக்கை வரும்வரை ஆடு, மாடுகள் ஏரி தண்ணீரை குடித்து விடாதபடி பாதுகாப்பதற்காக, உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த இஞைர்கள் சிலர், ஏரிக்கரையில் காவல் காத்து வருகின்றனர்.
கிராம ஏரியில் லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதந்த சம்பவம், அந்த கிராம மக்களை வருத்தம் அடைய செய்துள்ளது.