பதிவு செய்த நாள் : பிப்ரவரி 18,2011,00:15 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=190232
புதுச்சேரி: நாய்க்குட்டிகளை வயிற்றில் சுமந்து ஈன்ற விசித்திர நரி பிடிபட்டது. புதுச்சேரி அரும்பார்த்தபுரம் அடுத்த ஜி.என். பாளையத்தில் வீடுகளில் இருந்த கோழிகள் நள்ளிரவில் அடிக்கடி திருடு போனது. இரவு நேரங்களில் நரி ஒன்று ஊருக்குள் உலா வருவது கிராம மக்களுக்குத் தெரியவந்தது. இதுகுறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை ஊழியர்கள் ஜி.என். பாளையத்தில் முகாமிட்டு நரியை தேடினர். அப்போது ராமச்சந்திரன் என்பவரது வீட்டின் படிக்கட்டு கீழ்பகுதியில் நரி அடிக்கடி வந்து செல்வது தெரியவந்தது. நரி இல்லாத சமயத்தில் வனத்துறை ஊழியர்கள் அங்குபோய் பார்த்தனர். அப்போது மூன்று நாய்க்குட்டிகளை நரி ஈன்று பாலூட்டி வருவதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். இதனையடுத்து குட்டிகளுடன் நரியை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.
நாய்க்குட்டிகளைப் பொறியில் பிடித்து போட்டு நரிக்காக கடந்த 3 நாட்களாக காத்திருந்தனர். ஆனால் சமார்த்திசாலியான நரியிடம் இந்தத் திட்டம் பலிக்கவில்லை. கூண்டுக்குள் சிக்காமல் நரி அவ்வப்போது வந்து புத்தசாலித்தனமாக குட்டிகளைக் காப்பாற்ற போராடியது. இதனையடுத்து வனத்துறை ஊழியர்கள் தங்களது திட்டத்தை மாற்றினர். வீட்டு அறைக்குள் குட்டிகளை மாற்றி வைத்து நரிக்கு தெரியாமல் பொறி வைத்தனர். இந்த முறை கூண்டுக்குள் வசமாக நரி சிக்கி கொண்டது. பிடிபட்ட நரியும் அதன் குட்டிகளையும் வனத்துறை அலுவலகத்திற்கு ஊழியர்கள் பாதுகாப்புடன் கொண்டு வந்தனர். நரி ஈன்ற நாய்க்குட்டிகளை ஆச்சரியத்துடன் பொதுமக்கள் பார்த்துவிட்டு செல்கின்றனர்.
வனத்துறை டாக்டர் குமரன் கூறுகையில் "பிடிபட்ட பெண் நரி, நாட்டு ஆண் நாயுடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததால் 3 பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. நாய், ஓநாய், நரி, குள்ள நரி அனைத்தும் கேனிடா என்னும் முதுகெலும்புள்ள குடும்பத்தைச் சேர்ந்வை. இவை ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும் அந்தந்த இனத்தில் மட்டுமே இனப்பெருக்க காலத்தில் உறவு கொள்ளும். சில நேரங்களில் ஒரு இனத்துடன் மற்றொரு இனம் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைக்கும் போது இது போல் அரிதாக நடந்து விடுகிறது. நரி ஈன்ற குட்டிகளுக்கு இன்னும் கண் திறக்கவில்லை. கண் திறக்க 5 நாட்கள் பிடிக்கும். முழுமையாக வளர்ந்தால் தான் எந்த விலங்கினுடைய பண்பு வெளிப்படுகிறது என்பது தெரியவரும். நரியை வளர்த்தவர்கள் அதனைப் பராமரிக்க முடியாமல் வெளியேவிட்டுவிட்டதால் நாயுடன் பழகி குட்டிகளை ஈன்றுள்ளது' என்றார்.