Pages

Wednesday, February 2, 2011

அனுமதி இன்றி வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை மயில்கள் பறிமுதல்


பெருந்துறை அருகே, அனுமதி இன்றி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை மயில்கள் பறிமுதல் விவசாயி கைது

ஈரோடு, பிப். 2-
http://dailythanthi.com/article.asp?NewsID=624603&disdate=2/2/2011&advt=2

பெருந்துறை அருகே அனுமதி இன்றி தோட்டத்தில் வளர்க்கப்பட்ட மான், வெள்ளை மயில், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவைகளை வளர்த்த விவசாயியும் கைது செய்யப்பட்டார்.

தோட்டத்தில் மான்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகில் உள்ள புலவர்பாளையத்தில் பழனிசாமி என்ற விவசாயி அவருடைய தோட்டத்தில் அனுமதி இன்றி புள்ளிமான் ஒன்றை வளர்த்து வருவதாக ஈரோடு வன பாதுகாவலர் அருணுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் வனத்துறை ஊழியர்கள் ரவிந்திரநாத், மதிவாணன், தேவராஜ் ஆகியோர் சம்பந்தப்பட்ட விவசாயியின் தோட்டத்திற்கு சென்று சோதனை செய்தார்கள்.

புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள்

அப்போது அங்கு 3 வயது உள்ள பெண் புள்ளிமான், 2 வெள்ளை நிற மயில்கள், ஆஸ்திரேலியா நாட்டு மஞ்சள் நிற கிளி, வெள்ளை நிற புறா ஆகியவை வளர்க்கப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து வன ஊழியர்கள், அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது தோட்டத்தில் வளர்க்கப்பட்ட புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வளர்க்க வனத்துறையில் எந்த விதமான அனுமதியும் பெறவில்லை என்பது தெரியவந்தது.

மான்-வெளிநாட்டு பறவைகள் பறிமுதல்

எனவே வனத்துறை ஊழியர்கள் புள்ளிமான், வெள்ளை நிற மயில்கள் இரண்டு, வெளிநாட்டு கிளிகள் 4, வெள்ளை நிற புறா ஒன்று ஆகியவற்றை பறிமுதல் செய்தார்கள். இதை வளர்த்து வந்த விவசாயி பழனிசாமியையும் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட விவசாயி பழனிசாமி பெருந்துறை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்காவலில் அடைக்கப்பட்டார்.

இது குறித்து ஈரோடு வனபாதுகாவலர் அருண் நிருபர்களிடம் கூறியதாவது:-

1,250 யானைகள்

ஈரோடு மாவட்டம் அதிக வனப்பகுதியை கொண்டது. இங்கு 1,250 யானைகள், 18 முதல் 50 புலிகள், 5 வகையான மான்கள், அரிய வகை விலங்குகள் உள்ளன.

வனவிலங்குகளை வீட்டில் வளர்க்க வேண்டும் என்றால், அதற்கு வனத்துறையினரின் அனுமதி பெற வேண்டும்.

பெருந்துறை புலவர்பாளையத்தில் விவசாயி பழனிசாமி வனத்துறையின் அனுமதி இன்றி வீட்டில் புள்ளிமான், வெள்ளைநிற மயில், வெளிநாட்டு புறா மற்றும் கிளிகளை வளர்த்து வந்தார். எனவே அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

வனவிலங்குகளை அனுமதி இன்றி வளர்த்தால், அவர்கள் மீது வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் அவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். விவசாயியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட வனவிலங்குகள் வண்டலூர் உயிரியல் பூங்காவில் விடப்படும்.

இவ்வாறு ஈரோடு வன பாதுகாவலர் அருண் கூறினார்.