Pages

Monday, June 11, 2012

தெருநாய்களுக்கு கு.க., தேவை


பதிவு செய்த நாள் : ஜூன் 11,2012,07:01 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=484322

ஈரோடு: ஈரோடு மாநகரப் பகுதியில் அனைத்து தெருநாய்களுக்கும் கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணி முழுவீச்சில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.ஈரோடு மாநகரப் பகுதியில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. நாய் கடியால் குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன், பல்வேறு நோய்களுக்கும் காரணமாகி சுகாதார சீர்கேட்டையும் தெருநாய்கள் ஏற்படுத்துகிறது. மிருகவதை தடை சட்டத்தின்படி நாய்களை கொல்வது நிறுத்தப்பட்டது.நாய்களின் இனப்பெருக்கத்தை தடுக்க மாநகராட்சி நிர்வாகம், கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் திட்டத்தை கொண்டு வந்தது. 

இதற்காக தனியே மையம் ஏற்படுத்தப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.ஆனால், மத்திய அரசின் நிதியுதவி தாமதம், டாக்டர்கள், பணியாளர்கள் பற்றாக்குறை போன்ற காரணத்தினால், கருத்தடை ஆப்ரேஷன் பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. 2011-12ம் ஆண்டில் 275 நாய்களுக்கு கு.க., ஆப்ரேஷன் செய்யப்பட்டதாக மாநகராட்சி தரப்பில் கணக்கு காட்டப்படுகிறது.உண்மையில் இன்னும் குறைவாகத்தான் கருத்தடை ஆப்ரேஷன் நடந்திருக்குமென பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில், தெருக்களில் முன்பு இருந்ததை விட தற்போது அதிகளவில் நாய்கள் திரிவதை காண முடிகிறது. தெருநாய் தொல்லைக்கு முடிவு கட்ட கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.இதன்காரணமாக மீண்டும் மாநகரில் தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்ரேஷன் செய்யும் பணிகள் கடந்த மூன்றாம் தேதி முதல் துவங்கியது. நாளொன்றுக்கு 25 நாய்கள் வீதம் இலக்கு நிர்ணயித்து பிடித்து ஆப்ரேஷன் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், பணிகள் இன்னும் முழு வீச்சில் நடக்கவில்லை. களத்தில் போதுமான பணியாளர்கள் இறங்கி நாய்களை பிடிப்பதில்லை.இதனால், நாள்தோறும் இலக்கை விட குறைவான நாய்களுக்கே ஆப்ரேஷன் செய்யப்படுகிறது. எனவே, வழக்கம் போல் பெயரளவுக்கு இந்த பணிகளை மேற்கொள்ளாமல், இம்முறை மாநகரிலுள்ள அனைத்து நாய்களையும் பிடித்து கருத்தடை ஆப்ரேஷன் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்