http://www.dinamalar.com/News_Detail.asp?Id=479604
பதிவு செய்த நாள் : ஜூன் 04,2012,03:21 IST
குன்னூர்:நீலகிரி வனங்களில் சுற்றுலா பயணிகள் வீசியெறிந்து செல்லும் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இயற்கை சமன்பாட்டை தக்க வைத்து கொள்ளவும், 18 மைக்ரானுக்கு குறைவான "பிளாஸ்டிக்' பொருட்களை பயன்படுத்த இங்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுத்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகளாலும், சில உள்ளூர் விற்பனையாளர்களாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சில இடங்களில் காணப்படுகின்றன.
இந்நிலையில், நீலகிரியில் உள்ள சுற்றுலா ஸ்தலங்களை பார்வையிட்டு அழகிய நினைவுகளை கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும், வனத்துக்கும், வன விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் "பிளாஸ்டிக்' பொருட்களை மட்டும் இங்கு விட்டு செல்கின்றனர்.
இதில் குறிப்பாக, குன்னூர்-பர்லியாறு சாலையில் இரு பக்கமும் உள்ள வனப்பகுதிகளில் தங்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படங்களை எடுப்பதுடன், உணவு பொருட்களை அங்கு அமர்ந்து உண்கின்றனர்.
பின்பு, உணவு கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் இப்பகுதியிலேயே வீசிவிட்டு செல்வதால், பிளாஸ்டிக் கழிவுகள் இப்பகுதியில் குவிந்து கிடக்கின்றன.
இதனால், வன விலங்குகளுக்கு தீங்கு ஏற்படும் அபாயம் உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த மாதம் பர்லியாறு பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதனால் இதற்கு எவ்வித பயனும் கிட்டியதாக தெரியவில்லை. வனத்துறையில் போதிய ஊழியர்கள் இல்லாத நிலையில், இத்தகைய குப்பைகளை அகற்ற முடியாத சூழ்நிலையும் ஏற்பட்டு வருகிறது. இதனால், சுற்றுச்சூழலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
சில நேரங்களில் வனத்துறை ஊழியர்கள் சில இயற்கை ஆர்வலர்களின் ஒத்துழைப்போடு வனங்களில் தேங்கியுள்ள கழிவுகளை அகற்றுகின்றனர். குன்னூர் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து வருகின்றன. இவற்றை உண்ணும் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கழிவுகளை அகற்றினால் மட்டுமே விலங்குகளை காக்க முடியும்