Pages

Tuesday, May 8, 2012

விஷ ஊசி போட்டு 25 தெரு நாய்கள் படுகொலை: ஊராட்சி ஊழியர்கள் இருவர் கைது



பதிவு செய்த நாள் : மே 07,2012,22:51 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=463103

பூந்தமல்லி: தெரு நாய்களை ஊராட்சி ஊழியர்கள் பிடித்து விஷ ஊசி போட்டுக் கொலை செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இதே ஊராட்சியில் கடந்த மாதம் 100க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை போரூரை அடுத்துள்ளது காட்டுப்பாக்கம் ஊராட்சி. பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இங்கு தெருநாய்கள் அதிகம். இது குறித்து அடிக்கடி புகார் எழவே ஊராட்சி ஊழியர்கள் தெருநாய்களை பிடித்து விஷ ஊசி போட்டு கொலை செய்து வந்தனர்.

25 தெருநாய்கள் கொலை: காட்டுப்பாக்கம், அம்மன் நகரில் தெரு நாய்களைப் பிடித்து, அவற்றை விஷ ஊசி போட்டு, கொலை செய்வதாக புளு கிராஸ் அமைப்புக்கு நேற்று தகவல் கிடைத்தது. அந்த அமைப்பின் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது 25 தெருநாய்கள் விஷ ஊசி போட்டு கொலை செய்யப்பட்டிருந்தது.

ஒரு லிட்டர் விஷம் பறிமுதல்: சில நாய்களைப் பிடிக்க, ஊராட்சி ஊழியர்கள் நான்கு பேர் முயற்சித்துக் கொண்டிருந்தனர். அவர்களை புளு கிராஸ் அமைப்பினர் வளைத்து பிடித்தனர். இதில், இருவர் தப்பி ஓடினர். சுகாதார கண்காணிப்பாளர் இளங்கோ, குப்பை அள்ளும் டிராக்டர் ஓட்டுனர் கலைநேசன் ஆகியோரை பிடித்த புளூகிராஸ் அமைப்பினர், அவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் "சைனைடு' விஷம், ஆறு ஊசி, நாய்களைப் பிடிக்க வைத்திருந்த இரும்புக் கம்பிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இருவர் கைது: பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும், பிடிபட்ட இருவரும் பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் அழகு விசாரணை நடத்தினார். கலைநேசன், இளங்கோ மீது இந்திய தண்டனை சட்டம் 428, 470 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சிறையில் அடைத்தார்.

புளு கிராஸ் பொது மேலாளர் ஜான் வில்லியம்ஸ் கூறியதாவது: காட்டுப்பாக்கம் ஊராட்சியில் தொடர்ந்து தெரு நாய்களைக் கொலை செய்துள்ளனர். நேற்று முன்தினம் தான், முதல் முறையாகத் தகவல் கிடைத்தது. நேற்று காலை உறுதியான தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று நாய்களை கொலை செய்த ஊழியர்களை பிடித்தோம். மொத்தம் 25 நாய்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

100 நாய்கள் கொலை: வீட்டில் வளர்த்து வந்த நாய்களையும் ஊழியர்கள் பிடித்து கொலை செய்துள்ளனர். கடந்த சில வாரமாக இந்த ஊராட்சியில் 100 க்கும் மேற்பட்ட தெருநாய்கள் கொலை செய்யப்பட்டுள்ளன. அவற்றை அப்பகுதியில் உள்ள ஏரியில் புதைத்துள்ளனர். நாய்கள் புதைக்கப்பட்ட இடம் அடையாளம் காணப்பட்டு, அதில் ஒரு நாயின் உடலை மட்டும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேப்பேரி அனுப்பி வைத்துள்ளோம்.

தகவல் தெரிவிக்கலாம்: மற்ற நாய்களின் உடல்களை உடனடியாக வெளியே எடுக்க ஊராட்சிக்கு அறிவுறுத்தியுள்ளோம். இது சுற்றுச்சூழலுக்கு எதிரான காரியம். நாய்களின் இனப்பெருக்கத்தைத் தடுக்க கு.க., அறுவை சிகிச்சை மட்டுமே அதற்கு செய்ய வேண்டும். கொலை செய்வது தண்டைக்குரிய குற்றம். வேறு எந்த பகுதியிலானது தெருநாய்களை கொலை செய்வது தெரிந்தால் பொதுமக்கள் புளு கிராஸ் அமைப்பிற்கு 22354959 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு ஜான் வில்லியம்ஸ் கூறினார்.

ஊராட்சி நிர்வாகம் மறுப்பு: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத் தலைவர் திருநாவுக்கரசு கூறியதாவது: தெருநாய்களை பிடிக்கவோ, கொலை செய்யவோ ஊராட்சி மன்றமோ, ஒன்றிய நிர்வாகமோ உத்தரவு தரவில்லை. குப்பை அள்ளச் சென்ற ஊழியர்களிடம், பொதுமக்கள் நாய்த் தொல்லை அதிகமாக இருப்பதாகக் கூறவே, அவர்களாக நாய்களைப் பிடித்துக் கொன்றுள்ளனர். ஏற்கெனவே 100 நாய்கள் கொலை செய்யப்பட்டு, புதைத்ததாகக் கூறப்படும் இடத்தை ஜே.சி.பி., மூலம் தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் தான் அந்த நாய்களைக் கொலை செய்துள்ளனர். இது குறித்து விசாரிக்கப்படும். இவ்வாறு திருநாவுக்கரசு தெரிவித்தார்.