பதிவு செய்த நாள் : ஏப்ரல் 20,2012,00:42 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451534
மதுரை: மதுரையில் இருந்து பால்குடி மறவாத பச்சிளம் கன்றுக்குட்டிகளை, கேரளாவிற்கு அடிமாடாக அனுப்புவோர், கன்றுகளின் கால்களை கட்டிப்போட்டு, சுட்டெரிக்கும் வெயிலில் உயிருடன் வதைக்கின்றனர்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு இறைச்சிக்காக தினமும் நூற்றுக்கணக்கான மாடுகள் அனுப்பப்படுகின்றன. இதற்காக வியாபாரிகள் சந்தைகளுக்கு சென்று மாடுகளை விலைக்கு வாங்கி அடிமாடாக அனுப்புகின்றனர். கிடை மாடுகளை வளர்ப்போரிடம் காளை கன்றுகளை வியாபாரிகள் விலைக்கு வாங்குகின்றனர்.
வெயிலில் வதைப்பு: பிறந்து மூன்று முதல் நான்கு மாதத்திற்குள் உள்ள, 25 கிலோ எடையுள்ள கன்றுக்குட்டி ஒன்றை ரூ.2,000 முதல் ரூ.3,000 விலைக்கு வாங்குகின்றனர். பால்குடி மறவாத நிலையிலும், அவற்றை பசுவிடம் இருந்து பிரித்து செல்கின்றனர். தாயை பிரியும் கன்றுகள் வியாபாரிகளுடன் செல்ல அடம்பிடிக்கும். எனவே அவற்றின் கால்களை ஒன்றாக சேர்த்து கட்டுகின்றனர். பின், சுட்டெரிக்கும் வெயிலில் வயல்காட்டில் உருட்டி விடுகின்றனர். வெயிலில் பல மணி நேரம் காயும் கன்றுகள், வாயில் நுரைதள்ளிய நிலையில் உயிருக்கு போராடும். மயங்கிய நிலையில் கிடக்கும் கன்றுகளை அலேக்காக தூக்கி வேனில் போடுகின்றனர். கன்றைத்தேடி வரும் பசுவை குத்தி காயப்படுத்துகின்றனர். ரத்தம் வடியாமல் இருக்க காயத்தின் மீது மண்ணை தடவி முரட்டு வைத்தியம் பார்க்கின்றனர். "பணத்துக்காக எந்த கொடுமையையும் செய்யத் தயார்' என சிலர் இதுபோன்ற காரியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.