பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2012,04:07 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=451153
திருவண்ணாமலை: தானிப்பாடி அருகே வன விலங்குகளை வேட்டையாடிய சிறுவன் உள்ளிட்ட ஆறு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
தானிப்பாடி அடுத்த தென்பெண்ணையாறு காப்புக்காடு பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது, வனச்சரகர் சக்தி கணேஷ், வனக்காவலர்கள் வடிவேல், மோகன், தாண்டவராயன், தாமோதரன், ஆகியோர் துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஆறு பேர் கொண்ட கும்பல் நாட்டு துப்பாக்கியால் மான், முயல் மற்றும் வன விலங்குகளை வேட்டையாடுவதில் ஈடுபட்டிருந்தனர். வனத்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து, அவர்களிடமிருந்த மான் மற்றும் உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், பிடிபட்டவர்கள் புளியம்பட்டியை சேர்ந்த சேகர் (23), வேலு (23), ராதாகிருஷ்ணன் (20), முனியன் (30), குமரவேல் (30) மற்றும் 14வயதுக்குட்பட்ட சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். சிறுவனை செஞ்சி சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.