Pages

Friday, March 23, 2012

கூடைக்குள் சிக்கிய, குறும்புக்கார குரங்கு


http://www.dinamalar.com/News_Detail.asp?Id=433218
பதிவு செய்த நாள் : மார்ச் 23,2012,23:20 IST

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே, செங்காளிபாளையத்தில் துரத்தி, துரத்தி கடித்த குரங்கை, பொதுமக்கள் கூடையில் பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கடந்த வாரம், நரசிம்மநாயக்கன்பாளையம், டீச்சர்ஸ் காலனியில், ஒரு குட்டியுடன், நான்கு குரங்குகள், குடியிருப்புப் பகுதிகளைச் சுற்றி, சுற்றி வந்தன. ஆட்கள் இல்லாத வீடுகளின், ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, உணவுப் பண்டங்களை எடுத்து, தின்று சேதப்படுத்தின.

துரத்த வரும், பொதுமக்களை குரங்குகள் கடிக்க பாய்ந்ததால், பொதுமக்கள் ஓடினர். சில நாட்களுக்கு முன், ஒரு வழியாக, இந்த நான்கு குரங்குகளையும், நரசிம்மநாயக்கன்பாளையத்தில் இருந்து துரத்தினர். இக்குரங்குகள், இடிகரையில் இருந்து, துடியலூர் செல்லும் வழியில் உள்ள, செங்காளிபாளையம் கிராமத்துக்குள் நுழைந்தன. இங்கிருந்த வீடுகளுக்குள் புகுந்து, உணவு பண்டங்களை சேதப்படுத்தின. இது குறித்து, பொதுமக்கள், பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

கூண்டு, கைவசம் இல்லாததால், குரங்கை பிடிக்க தாமதம் ஏற்பட்டது. அருகில் உள்ள காட்டுப்பகுதியில், சுற்றித் திரிந்த குரங்குகள், நேற்று முன்தினம் மாலை, மீண்டும் செங்காளிபாளையம் கிராமத்துக்குள், புகுந்தன. அங்கு, விளையாடிக் கொண்டிருந்த நிஷாந்த், 4, என்ற சிறுவனின் காலை கடித்து விட்டு, தப்பியோடியது. குரங்குகளின் அட்டாகாசம் அதிகரித்ததால், பொதுமக்கள் குரங்கை பிடிக்க, முடிவு செய்தனர். தனியாக சிக்கிய ஒரு குரங்கை, கூடையால் மூடி, பிடித்தனர். பின், அதை, பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். செங்காளிபாளையத்தில் சுற்றி வரும் மேலும் மூன்று குரங்களை பிடிக்கும் முயற்சியில், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.