Pages

Tuesday, January 10, 2012

நசுக்கிக் கொல்லும் யானைகள் 'ஓ.கே'.-காளைகளுக்கு மட்டும் தடை-பின்னணியில் மலையாள அதிகாரிகள்?

http://tamil.oneindia.in/news/2012/01/10/india-is-malayala-lobby-behind-ban-on-jallikattu-aid0091.html
செவ்வாய்க்கிழமை, ஜனவரி 10, 2012, 12:01 [IST]

டெல்லி: 1960ம் ஆண்டு வன விலங்குகள் சட்டத்தில் ஜல்லிக்கட்டுக் காளைகளை மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் சேர்த்துள்ளதன் பின்னணியில் மலையாள அதிகாரிகளின் சதி இருப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் பாரம்பரியமாக பல நூறு ஆண்டுகளாக நடந்து வருவது ஜல்லிக்கட்டு. அக்காலத்தில் தென் தமிழகத்தின் வீரக் கதைகளை விளைவிக்கும் வித்தைக் களமாக விளங்கியது ஜல்லிக்கட்டு. பெண் எடுக்க விரும்பும் ஆண் மகன் தங்களது வீட்டுக் காளைகளை அடக்கி வென்றால்தான் அக்காலத்து தமிழர்கள் பெண் கொடுப்பார்களாம். அந்த அளவுக்கு தமிழர்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது இந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு.

அப்படிப்பட் ஜல்லிக்கட்டை முழுமையாக அழித்தொழிக்க டெல்லி வட்டாரத்தில் மிகப் பெரிய அளவில் ஒரு பெரிய குரூப்பே தீவிர நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாக கூறுகிறார்கள். அதன் ஒரு அங்கம்தான் ஜல்லிக்கட்டுக் காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது என்கிறார்கள்.

மேலும் இப்படி காளைகளை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து ஜல்லிக்கட்டை முடக்க முயல்வது மலையாள அதிகாரிகள் சிலர் செய்த சதி வேலை என்றும் பேச்சு அடிபடுகிறது.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழுவின் தலைவரான பேராசிரியர் அம்பலத்தரசு என்பவர் கூறுகையில், சிங்கம், புலி, சிறுத்தை போன்ற வன விலங்குகளைப் பாதுகாக்கும் நோக்கில்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இதில் போய் தற்போது காளைகளை சேர்த்துள்ளனர்.

அதேசமயம், கேரளாவில் ஆண்டுதோறும் யானைகளை வைத்து பல விளையாட்டுகளை நடத்துகின்றனர். யானைகளை பல்வேறு வகைகளில் கொடுமைப்படுத்துகின்றனர், சித்திரவதை செய்கின்றனர். யானை ஓட்டம் என்ற பெயரில் ரேஸே நடத்துகின்றனர்.

இதுபோன்ற ரேஸ் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது யானைகள் தாக்கி பலர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். மக்களைத் தாக்குவதும், கடைகளை தாக்கி சூறையாடுவதும் என யானைகளால் கேரளாவில் ஏகப்பட்ட பாதிப்புகள் இன்று வரை தொடர் கதையாக உள்ளது.

ஆனால் இதுவரை கேரளாவில் நடந்து வரும் யானை ஓட்டம் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு ஒரு ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை, தடுக்க முயலவில்லை, தடை செய்ய விரும்பவில்லை. காரணம் டெல்லியில் வலுவான பதவிகளில் உட்கார்ந்திருக்கும் மலையாள அதிகாரிகள்தான் என்றார்.

கேரள மக்களுக்கு யானை பாரம்பரியச் சின்னம் என்றால் தமிழர்களுக்கு ஜல்லிக்கட்டுதான் பாரம்பரிய அடையாளம். கேரளாவுக்கு ஒரு நியாயம், தமிழகத்திற்கு ஒரு நியாயம் என மத்திய அரசு நடந்து வருவதாகவும் அம்பலத்தரசு போன்றவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த விஷயத்திலும் கூட தமிழர்களை அவமதிக்கும் வகையில்தான் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் போன்றவர்கள் நடந்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.

காளைகளை வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் படு வேகமாக கொண்டு வந்த ஜெய்ராம் ரமேஷ், யானைகளை மட்டும் அதில் சேர்க்காமல் இருப்பதற்கு மலையாள லாபிதான் காரணம் என்கிறார்கள். உண்மையில் யானைதான் இந்தியாவின் பாரம்பரிய விலங்கு, அதைத்தான் நாம் உண்மையில் பாதுகாக்க வேண்டும். யானைகள் இந்தியா முழுவதும் பல்வேறு வகைகளில் சித்திரவதைக்குள்ளாக்கப்படுகின்றன. பிச்சை எடுக்க வைக்கிறார்கள், போட்டி என்ற பெயரில் கொடுமைப்படுத்துகிறார்கள். பலரது உயிரிழப்புகளுக்கும் யானை காரணமாக அமைகிறது. எனவே யானையைத்தான் பாதுகாக்க வேண்டும் என்பது அம்பலத்தரசுவின் வாதமாகும்.

ஜல்லிக்கட்டைக் காக்கவும், காளைகளை வன விலங்குகள் சட்டத்திலிருந்து மீட்டு கொண்டு வரவும் தமிழகம் தழுவிய மிகப் பெரிய போராட்டம் அவசியம், தமிழர்கள் தங்களது கலாச்சார, பாரம்பரிய விளையாட்டை அழிக்கும் சதியைப் புரிந்து கொண்டு ஒன்றுபட்டு குரல் கொடுத்து போராட வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

தற்போது மத்தியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ஜெயந்தி நடராஜன் இருக்கிறார். எனவே நல்லது நடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.