செவ்வாய்க்கிழமை, ஜனவரி 17, 2012, 8:13 [IST]
http://tamil.oneindia.in/news/2012/01/17/tamilnadu-20-competitors-injured-palamedu-jallikattu-aid0090.html
மதுரை: பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் மாடுகள் முட்டி 20 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் மதுரை அவனியாபுரத்திலும், நேற்று பாலமேட்டில் உள்ள மஞ்சள்மலை ஆற்றுத்திடலிலும் ஜல்லிக்கட்டு நடந்தது.
ஜல்லிக்கட்டை காண அதிகாலை முதலே பார்வையாளர்கள் குவியத் தொடங்கினர். ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம் ஜல்லிக்கட்டு விதிமுறைகளை எடுத்து கூறினார். அவர் பேசுகையில், மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி நிபந்தனைகளுக்குட்பட்டு இந்த ஜல்லிக்கட்டு நடக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கிடையே இந்த ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது. எனவே எந்த சூழ்நிலையிலும், எந்த விதத்திலும் மாடுகளை துன்புறுத்தக் கூடாது. வாலைப் பிடித்து மாடுகளை அடக்க முயற்சிக்க கூடாது. விதிகளை மீறி யாரும் செயல்பட்டால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள்' என்றார்.
காலை 9.45 மணியளவில் ஜல்லிக்கட்டு தொடங்கியது. முதலில் கோவில்களுக்கு சொந்தமான காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. மரியாதை நிமித்தமாக அந்த காளைகளை யாரும் பிடிக்கவில்லை.
அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்துவிடப்பட்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை இளைஞர்கள் அடக்க முயன்றனர்.
மாடுகளை பிடித்த வீரர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
காளைகளை அடக்க முயன்ற 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் மிக பலத்த காயமடைந்த 8 பேர் ஆம்புலன்ஸ்களில் ஏற்றப்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.