Pages

Thursday, October 27, 2011

பாம்புகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை : காணுயிர் சங்க உறுப்பினர் தகவல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338446
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2011,23:09 IST

சேலம்: பாம்புகளை கொல்வதை நிறுத்தணும். மக்களிடையே பயத்தை போக்கணும். எல்லா பாம்பும் விஷமல்ல, நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை.

பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை பிளேடு மூலம் அறுக்கக்கூடாது. சிலர், கல் வைத்து மந்திரம் மூலம் சரி செய்வதாக கூறி, தந்திர வேலையில் இறங்குவர்; அங்கும் செல்லக்கூடாது. பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தில் இருந்து இரண்டு, "இன்ச்' தள்ளி துண்டோ அல்லது கயிறு மூலம் இறுக்கமாக கட்டாமல், லேசாக கட்ட வேண்டும். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.

பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற எத்தனையோ மருந்துகள் வந்துள்ளன. சாரைப்பாம்பின் வாலில் விஷம் இருப்பதாக சிலர் கூறுவதுண்டு. அது தவறு. சாரைப்பாம்பு கடித்தாலும் விஷமில்லாதது. தோட்டத்தில் எலிகள், தவளைகள் வருவதை தடுக்கும் பணியில் சாரைப்பாம்புகள் ஈடுபடுகின்றன.

நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினரும், பாம்புகளை பிடிக்கும் வல்லுனருமான சாதிக்அலி கூறியதாவது: நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள், ஒவ்வொருவரும் விலங்கு, பறவை அல்லது ஊர்வன இனங்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பாம்புகளை கையாள்வதில் சிரமம் இருக்கும் என, உறுப்பினர்கள் நினைத்ததால், நானே விருப்பப்பட்டு பாம்புகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டினேன்.

தற்போது, அனைத்து வகை பாம்புகளையும் பிடிப்பது எப்படி என்பது குறித்து அனைத்து விபரங்களும் தெரிந்துள்ளது. பாம்புகளின் போக்கு குறித்து வனத்துறைக்கும் பயிற்சி அளித்துள்ளேன். பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 20 ஆண்டாக இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், பாம்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து வருகிறேன். பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பது குறித்து, வனத்துறை பணியாளர்கள், இளைஞர்களுக்கு கற்று கொடுத்துள்ளேன். பாம்புகளை பிடித்தவுடன், அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டு விட வேண்டும். தமிழகத்தில், 20 ஆண்டுகளில் இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளேன்.

சேலம் சுற்றியுள்ள பகுதிகளில், சமீப காலமாக பாம்புகளை பார்க்கும் மக்கள், அதை அடிக்காமல் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளிக்கின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்கும் முருகன், சிவா போன்றவர்கள் பாம்புகளை பிடித்து, வனத்துறையின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.

சமீபத்தில், சேலம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் மாணவியர் கைகளில் சாரைப்பாம்புகளை கொடுத்து, அச்ச உணர்வை நீக்கினேன். சில நிமிடங்களில் அந்த மாணவியரும் சாரைப்பாம்பை மாலையாக அணிந்து கொண்டனர். பாம்புகள் எப்போதும் நம்மை தாக்க வராது; அதை நாம் தாக்க நினைத்தால், அது உயிருக்கு பயந்து நம்மை கொத்த வருகிறது.

வீடுகளில் பழைய இரும்பு சாமான்களை சேர்த்து வைப்பது, பழைய பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாம்புகள் வந்து தங்குவதற்கு உகந்த இடமாகும். எனவே, தட்டுமுட்டு சாமான்களை சேர்க்காமல் அவற்றை கழிப்பதே நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.