பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2011,23:43 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=330377
கண்ணூர்: அழகு என்ற பெயரில், நாய்க்குட்டிகளின் வால் மற்றும் காதுகளை சிலர், "கட்' அல்லது "டிரிம்' செய்து வருகின்றனர். இனி, அவ்வாறு செய்தால், சிறையில் கம்பி எண்ண நேரிடும்.
நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உயர் வகை நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளை, சிலர் அழகுக்காக என்று கூறி, அதன் வாலையும், சிலர் காதுகளையும், "கட்' அல்லது "டிரிம்' செய்து விடுகின்றனர். இது விலங்குகளை மிகவும் துன்புறுத்தும் செயலாக கருதப்படுகிறது. இதுபோன்று செய்வது சட்டப்படி குற்றம் என, பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது. நாய்க்குட்டிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே, அதன் வால் மற்றும் காதுகளை வெட்டுவதற்கு அனுமதி உள்ளது. அழகு என்ற பெயரில் செய்யக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக, இவ்வாறு கொடுஞ்செயல் புரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில கால்நடை பராமரிப்பு துறை, கெனல் கிளப்புகள் மற்றும் உயிரின பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களை இக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. சட்டத்தை மீறி சில கால்நடை மருத்துவர்கள் செய்துவரும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
"வால் மற்றும் காதுகளை வெட்டி எடுத்த நாய்க்குட்டிகளை, கண்காட்சிகளில் பங்கேற்க அனுமதிக் கூடாது. அந்த நாய்க்குட்டிகளை எந்த கிளப்பும் பதிவு செய்யக் கூடாது. இதுகுறித்து, இந்திய கால்நடை கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவமனைகள் உட்பட, அனைவருக்கும் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்' என்றும், பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இப்புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்படுகிறதா என, மாநில கிளைகள் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், இதுகுறித்து போலீசாரின் உதவியைக் கோரவும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.