Pages

Saturday, October 29, 2011

மாடுகளை மிதிக்க விட்டு வினோத நேர்த்திக்கடன்


பதிவு செய்த நாள் : அக்டோபர் 29,2011,01:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=339708

வதோதரா :தரையில் படுத்துக்கொண்டு மாடுகளை ஓடவிட்டு மிதிக்க செய்யும், வினோத நேர்த்திக் கடனை குஜராத் மாநில பழங்குடியினர் மேற்கொண்டனர்.

குஜராத்தின் தஹோத் மாவட்டம் கர்பதா கிராம மக்கள், தங்கள் புத்தாண்டை வரவேற்கும் விதமாக "காய் கவுரி விரதம்' மேற்கொள்கின்றனர். தங்கள் குல தெய்வமான பாபா கோடா, சாமுண்டா ஆகிய தெய்வங்களுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு, அலங்கரிக்கப்பட்ட மாடுகளை தங்கள் மீது மிதிக்க செய்யும் சடங்கை செய்தனர். இதன் மூலம் மாடுகளுக்கு தாங்கள் செய்த பாவங்கள் மன்னிக்கப்படுவதாக இந்தக் கிராம மக்கள் நம்புகின்றனர்.

இந்த விழாவை பார்ப்பதற்காக சுற்றியுள்ள கிராம மக்களும் இந்த கிராமத்தில் கூடினர். நேர்த்திக் கடனை செலுத்துபவர்கள் தரையில் படுத்துக்கொள்ள, மாடுகள் வரிசையாக இவர்களை மிதித்தப்படி ஓடுகின்றன. இந்த நேர்த்தி கடனை செய்தவர்களுக்கு மாடு மிதித்ததில் எந்த காயமும் ஏற்படவில்லை.

Thursday, October 27, 2011

பாம்புகளை பார்த்து அச்சப்பட தேவையில்லை : காணுயிர் சங்க உறுப்பினர் தகவல்

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338446
பதிவு செய்த நாள் : அக்டோபர் 26,2011,23:09 IST

சேலம்: பாம்புகளை கொல்வதை நிறுத்தணும். மக்களிடையே பயத்தை போக்கணும். எல்லா பாம்பும் விஷமல்ல, நாகப்பாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன், சுருட்டை ஆகிய நான்கு வகை பாம்புகள் மட்டுமே விஷமுள்ளவை.

பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தை பிளேடு மூலம் அறுக்கக்கூடாது. சிலர், கல் வைத்து மந்திரம் மூலம் சரி செய்வதாக கூறி, தந்திர வேலையில் இறங்குவர்; அங்கும் செல்லக்கூடாது. பாம்பு கடித்தவுடன் கடிபட்ட இடத்தில் இருந்து இரண்டு, "இன்ச்' தள்ளி துண்டோ அல்லது கயிறு மூலம் இறுக்கமாக கட்டாமல், லேசாக கட்ட வேண்டும். உடனே அரசு மருத்துவமனைக்கு சென்று விட வேண்டும்.

பாம்புக் கடியில் இருந்து காப்பாற்ற எத்தனையோ மருந்துகள் வந்துள்ளன. சாரைப்பாம்பின் வாலில் விஷம் இருப்பதாக சிலர் கூறுவதுண்டு. அது தவறு. சாரைப்பாம்பு கடித்தாலும் விஷமில்லாதது. தோட்டத்தில் எலிகள், தவளைகள் வருவதை தடுக்கும் பணியில் சாரைப்பாம்புகள் ஈடுபடுகின்றன.

நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தை சேர்ந்த செயற்குழு உறுப்பினரும், பாம்புகளை பிடிக்கும் வல்லுனருமான சாதிக்அலி கூறியதாவது: நீலகிரி மாவட்ட காணுயிர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்கள், ஒவ்வொருவரும் விலங்கு, பறவை அல்லது ஊர்வன இனங்களில் ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும். பாம்புகளை கையாள்வதில் சிரமம் இருக்கும் என, உறுப்பினர்கள் நினைத்ததால், நானே விருப்பப்பட்டு பாம்புகளை பிடிப்பதில் ஆர்வம் காட்டினேன்.

தற்போது, அனைத்து வகை பாம்புகளையும் பிடிப்பது எப்படி என்பது குறித்து அனைத்து விபரங்களும் தெரிந்துள்ளது. பாம்புகளின் போக்கு குறித்து வனத்துறைக்கும் பயிற்சி அளித்துள்ளேன். பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். கடந்த 20 ஆண்டாக இப்பணியில் ஈடுபட்டுள்ளேன். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில், பாம்புகளின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்து வருகிறேன். பாம்புகளை எப்படி பிடிக்க வேண்டும் என்பது குறித்து, வனத்துறை பணியாளர்கள், இளைஞர்களுக்கு கற்று கொடுத்துள்ளேன். பாம்புகளை பிடித்தவுடன், அடர்ந்த காட்டுப் பகுதியில் விட்டு விட வேண்டும். தமிழகத்தில், 20 ஆண்டுகளில் இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட்டுள்ளேன்.

சேலம் சுற்றியுள்ள பகுதிகளில், சமீப காலமாக பாம்புகளை பார்க்கும் மக்கள், அதை அடிக்காமல் வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளிக்கின்றனர். இதன் மூலம் அப்பகுதியில் உள்ள பாம்புகளை பிடிக்கும் முருகன், சிவா போன்றவர்கள் பாம்புகளை பிடித்து, வனத்துறையின் உதவியுடன் அடர்ந்த வனப்பகுதியில் விட்டு விடுகின்றனர்.

சமீபத்தில், சேலம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அதில் மாணவியர் கைகளில் சாரைப்பாம்புகளை கொடுத்து, அச்ச உணர்வை நீக்கினேன். சில நிமிடங்களில் அந்த மாணவியரும் சாரைப்பாம்பை மாலையாக அணிந்து கொண்டனர். பாம்புகள் எப்போதும் நம்மை தாக்க வராது; அதை நாம் தாக்க நினைத்தால், அது உயிருக்கு பயந்து நம்மை கொத்த வருகிறது.

வீடுகளில் பழைய இரும்பு சாமான்களை சேர்த்து வைப்பது, பழைய பொருட்களை சேகரித்து வைக்கப்பட்டுள்ள இடங்களில் பாம்புகள் வந்து தங்குவதற்கு உகந்த இடமாகும். எனவே, தட்டுமுட்டு சாமான்களை சேர்க்காமல் அவற்றை கழிப்பதே நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

பட்டாசு சத்தம் இல்லாத கிராமம்: வவ்வால்களுக்காக "தியாகம்'

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=338472
பதிவு செய்த நாள் : அக்டோபர் 27,2011,00:25 IST


புதுச்சேரி:வவ்வால்களுக்காக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடினர்.தீபாவளி பண்டிகையென்றாலே முதலில் நமது நினைவுக்கு வருவது விதவிதமான பட்டாசுகள்.

ஆனால், புதுச்சேரி அடுத்த காலாப்பட்டு அருகில் தமிழக பகுதியைச்சேர்ந்த கழுப்பெரும்பாக்கம் கிராம மக்கள், தீபாவளி சமயத்தில் ஊருக்குள் பட்டாசுகளை நெருங்க விடுவதில்லை . கழுப்பெரும்பாக்கம் ஆலமரத்தில் ஊருக்குள் விருந்தாளியாக தங்கியுள்ள பழந்திண்ணி வவ்வால்களே கிராம மக்களின் இந்த தியாகத்திற்குக் காரணம். இந்த பழந்திண்ணி வவ்வல்களுக்காக தான் கடந்த 5 தலைமுறையாக இந்த கிராம மக்கள் பட்டாசுகள் வெடிக்காமல் சத்தமில்லாத தீபாவளியை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருகின்றனர். இரவில் உணவு வேட்டை நடத்திவிட்டு பகலில் மரக்கிளைகளில் தொங்கியப்படி ஓய்வு எடுக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்தால் பழந்திண்ணி வவ்வால்கள் கலைந்து சென்றுவிடும் என்பதால் யாரும் வெடிப்பதில்லை.தீபாவளி பண்டிகை என்றில்லாமல் பல காலமாகவே இங்கு பட்டாசுகள் வெடிப்பதில்லை. கிராமத்தில் திருமணம், காது குத்தல், ஊர் திருவிழா என பொது விஷேச நிகழ்ச்சிகள் களைக்கட்டினால் கூட பட்டாசு சத்ததைக் கேட்க முடியாது. இப்பகுதிகளில் பட்டாசு புகை, நெடி கூட அண்ட விடாமல் பல ஆண்டுகளாக கவனத்துடன் பாதுகாத்து பாராமரித்து வருகின்றனர்.

வழக்கம்போல, இந்தாண்டு தீபாவளி பண்டிகையான நேற்றும் இந்த கிராமத்தில் மக்கள் பட்டாசுக்களை வெடிக்கவில்லை. மற்றப்படி இனிப்புகள் செய்து, புத்தாடைகள் அமைதியாக தீபாவளியைக் கொண்டாடினர். இந்த ஊர் மக்களுக்குப் பழந்திண்ணி வவ்வால்கள் தான் செல்ல குழந்தைகளாக விளங்குகின்றன. மரத்திற்கு அடியில் வவ்வால்கள் அடிப்பட்டு கீழே விழுந்து கிடப்பதை யார் கண்டாலும் அடுத்த நிமிடமே அக்கறையுடன் முதலுதவி சிகிச்சை கொடுத்து மீண்டும் மரக்கிளையில் ஏற்றிவிடுகின்றனர். இறந்துவிட்டால் சில நிமிட மவுன அஞ்சலிக்குப்பின் மண்ணில் புதைத்துவிடுகின்றனர். எந்தக் காரணத்தை வேட்டையாடுபவர்களை ஊருக்குள் நுழைய விடுவதே கிடையாது. மனிதனுக்கு மனிதனே மனிதநேயம் காட்ட தவறும் இந்த உலகில், வவ்வால்கள் மீது பாசம் வைத்து கடந்த 5 தலைமுறைகளாக பட்டாசுகளுக்கு "குட்-பை' சொல்லி வரும் கழுப்பெரும்பாக்கம் கிராம மக்களின் உயரிய பண்பு வியக்க வைக்கிறது.

Thursday, October 13, 2011

மளிகை சாமான் வாங்கி வரும் "நாய்'


பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2011,00:40 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=329808

விழுப்புரம்:விழுப்புரத்தில் மளிகை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வரும் அதிசய நாயை பார்த்து அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.விழுப்புரம் விராட்டிக்குப்பம் பாதையைச் சேர்ந் தவர் பாபு,42; தையல் தொழிலாளி. இவரது மனைவி சுஜாதா,37. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் வீட்டில் கடந்த ஓராண்டாக தங்களது செல்லப்பிராணியாக லேபர் வகையை சேர்ந்த பெண் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர். இதற்கு "ஹனி' என பெயர் வைத்துள் ளனர். இந்த நாய் மளிகை கடைக்கு சென்று வீட்டின் உரிமையாளர் கொடுத்தனுப்பும் லிஸ்ட் படி கூடையில் பொருட்களை வாங்கி வருகிறது. இது மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு சென்று டிபன் மற்றும் சாப்பாடு, மெடிக்கல் கடையில் மருந்து வாங்கி வருவது உள்ளிட்ட வேலைகளை செய்கிறது. இந்த அதிசய நாயை பார்த்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அழகுக்காக நாய்க்குட்டி வாலை "கட்' செய்பவரா நீங்க? "கம்பி' எண்ண நேரிடும் எச்சரிக்கை!


பதிவு செய்த நாள் : அக்டோபர் 12,2011,23:43 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=330377

கண்ணூர்: அழகு என்ற பெயரில், நாய்க்குட்டிகளின் வால் மற்றும் காதுகளை சிலர், "கட்' அல்லது "டிரிம்' செய்து வருகின்றனர். இனி, அவ்வாறு செய்தால், சிறையில் கம்பி எண்ண நேரிடும்.

நடுத்தர மற்றும் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், உயர் வகை நாய்க்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் நாய்க்குட்டிகளை, சிலர் அழகுக்காக என்று கூறி, அதன் வாலையும், சிலர் காதுகளையும், "கட்' அல்லது "டிரிம்' செய்து விடுகின்றனர். இது விலங்குகளை மிகவும் துன்புறுத்தும் செயலாக கருதப்படுகிறது. இதுபோன்று செய்வது சட்டப்படி குற்றம் என, பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் அறிவித்துள்ளது. நாய்க்குட்டிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக மட்டுமே, அதன் வால் மற்றும் காதுகளை வெட்டுவதற்கு அனுமதி உள்ளது. அழகு என்ற பெயரில் செய்யக் கூடாது. சட்டத்திற்கு புறம்பாக, இவ்வாறு கொடுஞ்செயல் புரிவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாநில கால்நடை பராமரிப்பு துறை, கெனல் கிளப்புகள் மற்றும் உயிரின பாதுகாப்பு தொண்டு நிறுவனங்களை இக்கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. சட்டத்தை மீறி சில கால்நடை மருத்துவர்கள் செய்துவரும் இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.

"வால் மற்றும் காதுகளை வெட்டி எடுத்த நாய்க்குட்டிகளை, கண்காட்சிகளில் பங்கேற்க அனுமதிக் கூடாது. அந்த நாய்க்குட்டிகளை எந்த கிளப்பும் பதிவு செய்யக் கூடாது. இதுகுறித்து, இந்திய கால்நடை கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள மாநில கால்நடை மருத்துவக் கல்லூரி, அரசு கால்நடை மருத்துவமனைகள் உட்பட, அனைவருக்கும் உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும்' என்றும், பாரதிய உயிரின பாதுகாப்பு கழகம் தெளிவுபடுத்தி உள்ளது. மேலும், இப்புதிய உத்தரவுகள் அமல்படுத்தப்படுகிறதா என, மாநில கிளைகள் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால், இதுகுறித்து போலீசாரின் உதவியைக் கோரவும், சட்டப்படி நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்கவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

Saturday, October 8, 2011

மாடுகளுடன் லாரிகள் பறிமுதல்


பதிவு செய்த நாள் : அக்டோபர் 06,2011,21:31 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=326649

கோவை : அதிக மாடுகளை ஏற்றிச் சென்ற மூன்று லாரிகளை, இந்து முன்னணிக் கட்சியினர் மடக்கி போலீசில் ஒப்படைத்தனர். நேற்று அன்னூரில் இருந்து மாடுகளை ஏற்றி வந்த மூன்று லாரிகளை, கணபதி அருகே இந்து முன்னணி அமைப்பினர் மடக்கினர். லாரிகள் ஒவ்வொன்றிலும் சுமார் 35 அடிமாடுகள், கன்றுக் குட்டிகள் மற்றும் கறவை மாடுகள் நெருக்கமாக கட்டி வைக்கப்பட்டிருந்தன. தண்ணீர் தராமல் ஏற்றி வந்ததால் ஏற்பட்ட தாகம் காரணமாக சில கன்றுக் குட்டிகளுக்கு நாக்கு வெளியில் தள்ளியது. லாரிகளையும் சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு இந்து முன்னணியினர் ஓட்டிச் சென்றனர். அதிக லோடு ஏற்றிச் சென்றதற்காக, மூன்று லாரி உரிமையாளர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.