பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 09,2011,01:20 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=291216
பழநி : யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், வனக்கோட்டம் வாரியாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உணவு வளையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில் வனஎல்லை அருகேயுள்ள பகுதிகள், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. வன உயிரின நடமாட்ட பகுதிகளும், பட்டா நிலங்களாக மாறியுள்ளன. இதனால் உணவு, தண்ணீர் தேவைக்காக, வனஎல்லையை கடந்து யானைகள் நடமாடுவது அதிகரித்து வருகிறது.
இதனால் விளைநிலங்கள் சேதமடைவதுடன், உயிர் பலியும் ஏற்படுகிறது. இது தவிர யானைகள் வேட்டையாடுதல், துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. இவற்றை தவிர்க்க, வனஎல்லையை விரிவாக்கத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானைகளின் நடமாட்ட பகுதிகளில், வெளிமண்டல பகுதியை 40 மீட்டராக இருந்ததை, 200 மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வன எல்லையை ஒட்டியுள்ள நிலங்கள் குறித்த விபரங்களை, வனத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
யானைகள் பாதுகாப்பு திட்டத்தில், ஆண்டுதோறும் உணவு வளைய திட்டத்தை அமல்படுத்த அரசு ஆலோசித்து வருகிறது. வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: யானை பராமரிப்பில் உள்ள வனப்பகுதியில், கோட்டம் வாரியாக ஆண்டுதோறும் 125 ஏக்கர் பயன்படுத்தப்படவுள்ளது. இதில் யானைகளின் உணவு தேவைக்கான மூங்கில், விதவிதமான புல் வகைகள் வளர்க்கப்படும். குடிநீர் தேவைக்கு, அதிக பரப்பிலான பண்ணைக்குட்டையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதற்காக ஏக்கருக்கு நான்கு லட்சம் ரூபாய் வீதம் செலவிட அரசு திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.