Pages

Saturday, August 6, 2011

வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் : போலிகளை தடுக்க தேவை நடவடிக்கை


பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2011,23:00 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=290056

ராஜபாளையம் : வெளிநாடுகளுக்கு ராஜபாளையம் நாய்கள் செல்லும் நிலையில் , நாய்குட்டிகள் உற்பத்தியில் போலிகள் புகுந்துள்ளதால் இதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். உலகில் உள்ள 350 இன நாய்களில் இந்திய வகையில் 6 இனங்களே அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இதில் ராஜபாளையம், சிப்பிபாறை, கன்னி, கோம்பை என நான்கு இனங்கள் தென்தமிழகத்தை சேர்ந்தவை. வீட்டு உணவை சாப்பிட்டு வளர்பவை. இதற்கு வெளிநாட்டு நாய்களை போன்று எஜமான் விசுவாசம், கீழ்படிதல், நுகர்வு தன்மை, சுறுசுறுப்பு உண்டு. வீட்டு காவலுக்கு ராஜபாளையம் நாய்கள், வேட்டைக்காக சிப்பிபாறை, கோம்பை, கன்னி வகை நாய்கள் பயன்படுகின்றன.

எந்த இனத்தை சேர்ந்தவை நாய்குட்டி என சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான "கென்னல் கிளப்' ராஜபாளையத்திலும் செயல்படுகிறது. இங்கு தென் தமிழகத்தை சேர்ந்த நாய்களுடன் வெளிநாட்டு நாய் வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன. ராஜபாளையம் வகை நாய்கள், மக்களை கவர்ந்து உள்ளன. வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து மாதம் 100 நாய்களுக்கு ஆர்டர் வருகின்றன . இங்குள்ள பண்ணை மூலம் மாதம் 20 முதல் 25 நாய்களே கொடுக்க முடிகிறது. இதன் குட்டிகள் 4000 ரூபாய் முதல் 8000 வரை விலை போகின்றன.

ராஜபாளையத்தில் "கென்னல் கிளப்' அங்கீகாரம் இல்லாத சில பண்ணைகளும் உள்ளன. இங்கு குடிசை தொழில் போல் நாய்குட்டி உற்பத்தியும் மாறி வருவதால் சிலர் லாப நோக்குடன் , தெருநாய்களை கலந்து, கலப்பின குட்டிகள் உருவாக்குகின்றனர். இந்த கலப்பின குட்டிகளோ பார்வை கோளாறு, காது கேட்கும் தன்மை குறைவு போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றன. குட்டியாக இருக்கும்போது தெரியாத இந்த குறைகள், வளரும்போது தான் தெரிகிறது. இதில் ஏமாறும் பலரும் எங்கு புகார் செய்வது என தெரியாமல் உள்ளனர். ராஜபாளையம் வகை நாய்களுக்கு தேவை அதிகமாக இருப்பதால், இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, நாய் உற்பத்தியை பெருக்கலாம்.

ராஜபாளையம் கான்டம்

பிளேட் கென்னல் கிளப் நாய்பண்ணை உரிமையாளர் சுரேந்திரன்பாபு கூறியதாவது: ராஜபாளையம் வகை நாய்கள் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு மாறும் தன்மை கொண்டவை. இதற்கு எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு . ஜம்முவில் உள்ள பாராமுல்லா ராணுவ முகாம், அந்தமான் தீவிற்கு அனுப்பி உள்ளோம். வெளிநாட்டு மோகத்தால், நம்நாட்டு நாய்களுக்கு வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில், தற்போது கேரளாவில் வீடு, எஸ்டேட்களுக்கு இங்கிருந்து குட்டிகள் செல்கின்றன. ஆந்திரா, கர்நாடகாவிற்கும் குட்டி செல்கின்றன. இத்தொழிலை அரசு முறைப்படுத்தி, வங்கி கடனுக்கு ஏற்பாடு செய்தால், வேலை இல்லா இளைஞர்கள் பலர் இத்தொழிலில் ஈடுபடுவர், என்றார்.

கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் டாக்டர் முருகன் கூறுகையில், ""கென்னல் கிளப் ஆப் இந்தியா சான்றிதழ் தரும் நிறுவனத்தில் நாய்களை வாங்கலாம். மக்களிடம் விழிப்புணர்வு இல்லாததால் தான் அங்கீகாரம் பெறாதவர்கள், கலப்பின குட்டிகளை விற்கின்றனர். நாய்பண்ணை துவங்க விரும்புவர்கள், நாய் வாங்க நினைப்பவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்,'' என்றார். இவரை தொடர்பு கொள்ள 94440 42046.