தடாகம் பகுதியில் பள்ளத்தில் தவறி விழுந்த காட்டு யானை சாவு ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்ற போது பரிதாபம்
கோவை,ஜுலை.11-
கோவையை அடுத்த தடாகம் பகுதியில் ரேடியோ காலர் கருவி பொருத்த முயன்றபோது கால் தவறி விழுந்த யானை பரிதாபமாக இறந்து போனது.
யானைகளின் நடமாட்டம்
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் குடியிருப்பு பகுதிகள், விவசாய நிலங்களுக்குள் அடிக்கடி காட்டு யானைகள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வனத்துறையினர் எடுக்கும் நடவடிக்கைகள் முழு அளவில் பலன் அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து காட்டு யானைகளில் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தி அந்த யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதல்கட்டமாக காட்டு யானைகளை பிடிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியில் இருந்து கபில்தேவ், நஞ்சன் என்ற 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு, அவற்றின் உதவியுடன் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒரு பெண் யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டது. இந்த யானையின் நடமாட்டம் ஜி.பி.எஸ். முறைப்படி செயற்கைகோள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குட்டி யானை
அதைத் தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக பகுதியில் இருந்து அடிக்கடி ஊருக்குள் புகும் காட்டு யானை ஒன்றுக்கு இந்த கருவியை பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. டபிள்ï. டபிள்ï.எப்.குழு மோகன்ராஜ் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் அஜய் தேசாய் மேற்பார்வையில் வனத்துறையின் கால் நடை மருத்துவர்கள் டாக்டர் மனோகரன், டாக்டர் கலைவாணன், மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம், டாப்சிலிப் யானை முகாமை சேர்ந்த யானை காவலர்கள் அடங்கிய வனத்துறையின் சிறப்பு குழு மற்றும் வனக்காவலர்கள் 30-க்கும் மேலானவர்கள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் உள்ள தடாகம் காப்பு காட்டுப்பகுதிக்குள் முகாமிட்டு காட்டு யானைகளை தேடிச்சென்றபோது, ஒரு குட்டியானை மட்டும் சுற்றித்திரிந்ததை பார்த்தனர்.
குட்டியானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தினால், கழுத்தில் இருந்து எளிதாக கீழே விழுந்து விடும் என்பதால் இந்த முயற்சி கைவிடப்பட்டது.
யானை சாவு
இதைத்தொடர்ந்து விடிய, விடிய வனத்துறையினர் சின்னதடாகம் காட்டுக்குள் முகாமிட்டிருந்தனர். யானையை கண்டுபிடித்து, துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த நிலையில் அங்கு வந்த 20 வயது மதிக்கதக்க காட்டு யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்த குறிபார்த்தனர்.
இதற்கான முயற்சியில் ஈடுபட்டபோது அந்த யானை எதிர்பாராதவிதமாக அங்கிருந்த சிறிய பள்ளத்தில் தலை கீழாக உருண்டு விழுந்தது. இதனால் அந்த யானை பரிதாபமாக இறந்துபோனது.
அதைத் தொடர்ந்து அந்த காட்டுயானையை கால்நடை மருத்துவர் குழுவினர் அங்கேயே பிரேத பரிசோதனை செய்து விதிமுறைகளின்படி சம்பவ இடத்திலேயே உடல் அடக்கம் செய்தனர்.