முதுமலை வனத்தில் "மொபைல் டவர்' அமைக்க ஆய்வு: பறவையினங்கள் அழியும் அபாயம்!
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2011,23:38 ISThttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=267944
முதுமலை புலிகள் காப்பகத்திற்குள் மொபைல் போன் டவர் அமைக்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன; "இந்த திட்டம் வந்தால், அப்பகுதியில் உள்ள பறவைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும்,' என வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் ஆசியாவின் சிறந்த உயிர்சூழல் மண்டலத்துக்குள் வருகிறது. இங்கு புலி, யானை, கரடி, காட்டெருமை உட்பட பல்வேறு விலங்கினங்களும், பருந்து, கழுகு, இருவாச்சி, மயில், குயில், மரங்கொத்தி, மைனா, புஷ்சாட், பீ-ஈட்டர், பிளாக் ஹெட் புல்புல், ரெட் விஷ்கள் புல்புல், திரஷ், டிராங்கோ உட்பட பல்வேறு சிறிய பறவை இனங்களும் உள்ளன. இந்நிலையில், புலிகள் காப்பகத்துக்குள் மொபைல் போன் டவரை அமைக்க, தொலைத் தொடர்புத் துறை (பி.எஸ். என்.எல்.,) முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கான முதற்கட்ட ஆய்வுப்பணியும் நடந்து முடிந்துள்ளது. முதுமலையின் அடர்ந்த வனப்பகுதிகளில் டவர் அமைக்க அனுமதி கொடுக்க புலிகள் காப்பக நிர்வாகம் அனுமதிக்கவில்லை. ஆனால், சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி உள்ள பகுதிகளில் மட்டும் ஆய்வு நடத்த அனுமதி வழங்கியதாக தெரிகிறது. இதன்படி, முதுமலையில் உள்ள கார்குடி, அப்பர் கார்குடி ஆகிய பகுதிகளில் டவர் அமைப்பதற்கான ஆய்வுகள் நடந்துள்ளன. இந்த பணிக்கு வன உயிரின ஆர்வலர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதுமலையில், சுற்றுலா பயணிகள் வரும் பகுதி, சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதியற்ற பகுதிகள் என்று வகைப்படுத்தினாலும், அவை அனைத்தும் வன உயிரினங்கள் நடமாடும் பகுதிகளாகும். இங்கு மொபைல்போன் டவர் வந்தால், இங்கு வாழும் பறவை இனங்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு, அந்த இனமே அழியும் நிலை ஏற்படும்.
இது குறித்து சி.பி.ஆர்., கல்வி மைய திட்ட அலுவலர் குமாரவேலு கூறியது:தேசிய அளவில் விவசாயத்துக்கான ரசாயனங்கள் பயன்படுத்துவதால், பல பறவை இனங்கள் அழிந்து விட்டன. மொபைல் டவரினால், சிட்டு குருவி உட்பட நகரங்களில் வசிக்கும் பறவை இனங்கள் குறைந்து விட்டன. இதற்கு கதிர்வீச்சு பாதிப்பு முக்கிய காரணம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதுமலையில் மொபைல் டவர் அமைத்தால், அதிலிருந்து வெளியேறும் கதிர்வீச்சுகள் பறவை இனங்களின் இனப்பெருக்கத்தை நிச்சயம் பாதிக்கும். பறவைகள் முட்டையிட்டாலும், அதில் குஞ்சு பொறிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைந்து போகும். அழிவின் பிடியில் உள்ள பருந்து, கழுகு, ஆந்தை உட்பட பிற சிறிய பறவைகள் முழுமையாக அழிய இந்த வளர்ச்சி பணிகள் முக்கிய காரணியாக அமையும். வனத்துறை இந்த பணிக்கு அனுமதி கொடுக்காமல் இருப்பதே நல்லதாகும், என்றார்.
"புலிகள் காப்பக பகுதிகளில் எவ்விதமான வளர்ச்சிப்பணிகளும் மேற்கொள்ளக் கூடாது,' என தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு அறிவித்துள்ள நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் மொபைல் டவர் போட ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது பல்வேறு சர்ச்சையை கிளப்பி வருகிறது.-என்.பிரதீபன்-