பதிவு செய்த நாள் 4/23/2011 1:47:43 AM
http://dinakaran.com/highdetail.aspx?id=34631&id1=13
சென்னை : வாக்கிங் செல்லும் நாயை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தனியார் நிறுவன பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தேனாம்பேட்டை சீத்தாம்பாள் காலனியை சேர்ந்தவர் ரம்யா (25) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் வாய்மொழி புகார் ஒன்றை நேற்று முன்தினம் அளித்தார்.
அதில், “அதே பகுதியைச் சேர்ந்த சீனு (50) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தினமும் தான் வளர்த்து வரும் விலை உயர்ந்த வெளிநாட்டு நாயுடன் எங்கள் பகுதியில் வாக்கிங் வருகிறார். இந்த வெளிநாட்டு நாய் மிகவும் உயரமாக உள்ளது. மேலும், அந்த பகுதியில் செல்வோர் எல்லோரையும் பயமுறுத்துகிறது. எங்களால் நடக்கவே முடியவில்லை. எதிர்க்கும் நாய்களை கடித்து குதறுகிறது. இதனால், அந்த பகுதியில் மக்கள் நடமாடவே அச்சமாக உள்ளது. குழந்தைகளும்,
பெரியோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, சீனுவை போலீசார் கண்டிக்க வேண்டும். அந்த பகுதியில் அவர் நாயுடன் வாக்கிங் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும்’’ என்று கூறினார். இந்த புகாரைக் கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். நாங்கள் இதில் தலையிட முடியாது என்று ரம்யாவிடம் கூறினார். அவர் நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும் என்று அடம் பிடித்தார். இதனால், போலீசார் வேறு வழியில்லாமல் சீனுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.