வலசை வரும் பறவைகளுக்கு நீர்நிலை அவசியம்:பறவையியலாளர் சுகுமார் பேச்சு
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=215746
பதிவு செய்த நாள் : மார்ச் 30,2011,22:58 IST
கோவை : ""வெளிநாடுகளிலிருந்து இங்கு வலசை வரும் பறவைகள், முட்டையிட்டு குஞ்சு பொரிப்பதில்லை,'' என, பறவையியலாளர் சுகுமார் தகவல் தெரிவித்தார்.கோவை "ஓசை' சுற்றுச்சூழல் அமைப்பின் சார்பில் "சூழல்-சந்திப்பு' நிகழ்ச்சியில், "வலசை போகும் பறவைகள்' என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: காலநிலை மாறுபாடு, உணவுத்தேவை மற்றும் வாழிடம் தொலைந்து போதல் போன்ற காரணங்களால், பறவைகள் இடம் பெயர்ந்து வெகு தூரம் செல்கின்றன. இதைத்தான் "வலசை போதல்' என்கிறோம். பல நாடுகளிலிருந்தும் பல ஆயிரம் மைல்களைத் தாண்டி, இந்தியாவுக்கு வரும் பறவைகள் ஏராளம். சைபீரியா போன்ற குளிர் நாடுகளில், கடும் பனிப்பொழிவால் பறவைகளின் வாழ்விடங்கள் முற்றிலுமாக மறைந்து விடும். பறவைகள் உண்ணும் சிறு பூச்சிகள், தும்பிகள், வண்டுகளைக் கூடப் பார்க்க முடியாது. குளிரும் கடுமையாக இருக்கும். அதனால், ரோசி பாஸ்டர், காமன் ஸ்வாலோ, ஒயிட் வேக்டெயில் போன்ற பறவைகள், இதமான காலநிலையைத் தேடி பலுசிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளைக் கடந்து, இந்தியாவுக்கு வருகின்றன; தமிழகத்தின் சிறு சிறு நீர் நிலைகளில் அடைக்கலமாகின்றன. செப்டம்பரிலிருந்து மார்ச் வரையிலும்தான், இந்த பறவைகள் வலசை வருவதுண்டு. கோடை துவங்கும் முன்பே தாயகம் திரும்பி விடும். வலசை வரும் பறவைகள் எதுவும், இங்கு முட்டையிடுவதோ, குஞ்சு பொரிப்பதோ கிடையாது. இவ்வாறு பறவைகள், இடம் பெயர்வதை செயற்கைக் கோள்கள், ரேடார்கள் மூலமாகக் கண்காணிக்க முடியும். கால்களில் வளையங்களை மாட்டி விடுவது, வண்ணங்களைப் பூசி அனுப்புவது போன்ற நடைமுறைகளும் கடை பிடிக்கப்படுகின்றன. வெகுதூரத்துக்கு இடம் பெயர்ந்து வரும் பறவைகளுக்கு, இயற்கை சில சாதகங்களைச் செய்து கொடுத்திருக்கிறது. பரிணாம வளர்ச்சியானது, பறத்தலில் தனிப்பட்ட உத்திகளைக் கற்றுத் தந்திருக்கிறது. ஓய்வு, உறக்கம், உணவு தேடல் என பல வேலைகளையும் பறக்கும்போதே இந்த பறவைகள் முடித்துக்கொள்ளும். பறவைகள் வெப்ப ரத்தம் கொண்டவை. கூர் உணர்வின் மூலமாக காலநிலை மாறுபாட்டை அவை உணர்ந்து கொள்ளும். போகும் வழியில் எதிரிகளிடமிருந்து தப்பிக்கவும், வெயிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளவும் இரவு நேர பயணத்தை அவை தேர்ந் தெடுக்கின்றன. நீண்ட நெடிய பயணம் என்பதால், வலசை போவதற்கு முன்பாக பறவைகள் தங்களைத் தயார்படுத்திக் கொள்வதுண்டு. வழக்கமான உணவையே அதிகமாக உண்டு, தங்களது எடையை ஏற்றிக்கொள்கின்றன. உடலில் 55 சதவீதம் வரை கொழுப்புச் சத்தை ஏற்றிய பின்பே, பயணத்தைத் துவக்குகின்றன. நெடும் பயணம் செல்வதற்குப் பறவைகளுக்கு ஆற்றல் தருவது, இதுதான். வலம் வரும் பறவைகளை வேட்டையாடுவதற்காக வவ்வால்களும், ஆங்காங்கே துப்பாக்கிகளுடன் மனிதர்களும் காத்திருப்பார்கள்; கடும் மழையும் குறுக்கிடும். அவற்றையெல்லாம் தாண்டியே பறவைகள் வருகின்றன. வட துருவமான ஆர்க்டிக் துருவத்திலிருந்து அன்டார்டிகா துருவம் வரை 22 ஆயிரம் கி.மீ.,வரை வலசை போகும் பறவைகளும் இருக்கின்றன. கோல்டன் புளோவர் என்ற பறவை, வட அமெரிக்காவுக்கு அருகிலுள்ள அலாஸ்காவில் இருந்து இங்குள்ள பல நாடுகளுக்கு வலசை வருவதை பறவை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். கோவையிலுள்ள நீர் நிலைகளுக்கு சைபீரியா, பலுசிஸ்தான், இமயமலையிலிருந்து வுட் சேண்ட் பைப்பர், மார்ஷ் கல், ஒயிட் வேக்டெயில், கிரீன் ஷாங்க் உள்ளிட்ட பல பறவைகள் வருகின்றன. நீர் நிலைகளை மாசு படுவதிலிருந்து காப்பது, தொழிற்சாலைக் கழிவுகள் கலக்காமல் தடுப்பது, குளம், குட்டைகளை மூடவிடாமல் தடுப்பதன் மூலமாக வலசைப் பறவைகளை காப்பாற்ற முடியும். விருந்தினர்களைப் போல வெளிநாடுகளில் இருந்து வரும் இந்தப் பறவைகள், நமக்கு பல தகவல்களையும், பல வியப்புகளையும் விட்டுச் செல்கின்றன. எங்கிருந்தோ இங்கு நம்மைத் தேடி வரும் சிறகுள்ள நண்பர்களை, காலமெல்லாம் பார்ப்பதற்கான நல்ல சூழலை நாம் உருவாக்குவோம். இவ்வாறு பறவையியலாளர் சுகுமார் பேசினார். நிகழ்ச்சிக்கு, மெட்ரோபாலிஸ் ரோட்டரி கிளப் முன்னாள் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். என்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து லட்சுமி நரசிம்மன் விளக்கினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாடு முழுவதும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ள வைபவ் தேசாய் கவுரவிக்கப்பட்டார்; அமைப்பின் செயலாளர் அவை நாயகன் வரவேற்றார்; தலைவர் காளிதாசன் நன்றி கூறினார்.