Pages

Saturday, March 12, 2011

வனவிலங்குகள் கணக்கெடுப்பு


மேட்டுப்பாளையம்-சிறுமுகை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு தொடங்கியது 175 ஊழியர்கள் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம், மார்ச்.13-
http://dailythanthi.com/article.asp?NewsID=632886&disdate=3/13/2011&advt=2

மேட்டுப்பாளையம்- சிறுமுகை வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதில் 175 ஊழியர்கள் ஈடுபட்டனர்.

கணக்கெடுக்கும் பணி

கோவை வனக்கோட்டத்துக்குட்பட்ட கோவை, போளுவாம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் காட்டுயானை, புள்ளிமான், கடமான், காட்டெருமை, செந்நாய், கரடி, சிறுத்தை மற்றும் பிற வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாக நடமாடி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் வனத்துறை சார்பில், அடர்ந்த வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. வழக்கம் போல இந்த ஆண்டு வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது.

175 பேர் ஈடுபட்டனர்

கோவை மண்டல வனப்பாதுகாவலர் கந்தசாமி, மாவட்ட வனஅலுவலர் திருநாவுக்கரசு ஆகியோர் உத்தரவின் பேரில் மேட்டுப்பாளையம், சிறுமுகை வனப்பகுதிகளில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியில் மொத்தம் 175 பேர் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் தன்னப்பன் தலைமையில் வனவர்கள் சீனிவாசன், சடையப்பன், மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் உள்பட 72 பேர், ஒரு குழுவிற்கு 8 பேர் வீதம் 9 குழுக்களாக பிரிந்து ஜக்கனாரி, உளிக்கல், கல்லாறு, சுண்டப்பட்டி, கண்டிïர், நெல்லிமலை ஆகிய வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர்குட்டைகள், நீர் நிலைகள், நீரோடைகளில் வனவிலங்கு கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

சிறுமுகை வனப்பகுதியில் வனச்சரக அலுவலர் தினேஸ்குமார் தலைமையில் வனவர்கள் ராஜ்கபூர், சசிகபூர் மற்றும் வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்புக்காவலர்கள், வனஉயிரின ஆர்வலர்கள் உள்பட 60 பேர், ஒரு குழுவிற்கு 5 பேர் வீதம் 12 குழுக்களாக பிரிந்து, ஓடந்துறை, குஞ்சப்பனை, பெத்திக்குட்டை, கூத்தாமண்டி, காந்தவயல் ஆகிய வனப்பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் கணக்கெடுக்கும் பணி நடத்தினார்கள். காலை 6 மணிக்கு தொடங்கிய பணி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இன்று (13-ந்தேதி) வனப்பகுதியில் வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள் மற்றும் கண்ணுக்கு தெரியும் வனவிலங்குகள் என கணக்கெடுக்கும் பணி நடைபெற உள்ளது.