Pages

Wednesday, September 29, 2010

விரியன் பாம்பை காலால் மிதித்து குழந்தையை காப்பாற்றிய நாய்

செப்டம்பர் 29,2010,23:56 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=95940

பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி அருகே குழந்தை இருந்த அறைக்குள் புகுந்த கட்டுவிரியன் பாம்பை வீட்டில் வளர்த்த நாய் காலால் மிதித்து, எஜமானருக்கு காட்டி கொடுத்தது. சேலம் பனமரத்துப்பட்டி அடுத்த களரம்பட்டி தண்ணிகாடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (43). அவருக்கு நிவேதிதா (13),நிரஞ்சனி (8) ஆகிய குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் நிவேதிதா வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நிரஞ்சனி டி.வி.,பார்த்துகொண்டிருந்தார். அப்போது, 4 அடி நீளமுள்ள கட்டுவிரியன் பாம்பு, அறைக்குள் புகுந்ததை பார்த்து நிரஞ்சனி அலறினார். அவர்கள் வளர்க்கும் நாய் குழந்தையின் சத்தம் கேட்டு, அறைக்குள் வந்தது. கட்டுவிரியன் பாம்பை கண்ட நாய் குரைத்துள்ளது. இருப்பினும் நகர்ந்து செல்ல முயன்ற பாம்பின் தலை மீது, நாய் தனது முன் காலை வைத்து, அழுத்தி பிடித்துக்கொண்டது. நாயின் காலில் சிக்கிய பாம்பு, வாலை வேகமாக அசைத்து ஆவேசமாக சீறியது. பாம்புடன் போராடிய நாய், வினோதமாக சத்தம்போட்டு வீட்டு எஜமானரை அழைத்துள்ளது. அதைக்கேட்டு ஓடி வந்த பாலசுப்ரமணியும் மற்றவர்களும், கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பை அடித்து கொன்றனர்.

பாலசுப்ரணியம் கூறுகையில்,""இப்பகுதியில் விவசாய நிலங்கள் நிறைய உள்ளதால், எலி, தவளை ஆகியவற்றை பிடித்து சாப்பிட நிறைய பாம்புகள் வருகின்றன. அவை சில நேரம் வீட்டுக்குள் நுழைந்து விடுகின்றன. இயற்கையாகவே நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம் உள்ளதால், வீட்டுக்குள் பாம்புகள் வருவதை கண்டுபிடித்து விடுகின்றன. இதுவரை வீட்டுக்குள் நுழைய முயன்ற மூன்று பாம்புகளை இந்த நாய் தடுத்துள்ளது. இந்த நாய் வினோதமாக சத்தம் போட்டு, பாம்பு வருவதை எங்களுக்கு உணர்த்தி விடும். நன்றி உள்ள ஜீவன் என்பதை நாய் நிரூபித்துள்ளது,'' என்றார்.