Pages

Sunday, September 26, 2010

யானைகள் பலியான சம்பவம் : அமைச்சர் மம்தா வருத்தம்

செப்டம்பர் 25,2010,23:06 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=92836

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் சரக்கு ரயில் மோதி, யானைகள் பலியான சம்பவத்திற்கு, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், சிலிகுரி அருகே கடந்த புதன்கிழமை, வேகமாக வந்த சரக்கு ரயில் மோதி, ஏழு யானைகள் பரிதாபமாக பலியாகின. நாட்டையே அதிர்ச்சியடைய வைத்த இந்த சம்பவத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், யானைகள் பலியான சம்பவத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியிருப்பதாவது: ரயில் மோதி யானைகள் பலியான சம்பவம் துரதிருஷ்டவசமானது.இது என்னை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமலிருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ரயில் தண்டவாளங்களை யானைகள் கடக்கும் வனப்பகுதிகள் குறித்து ஆய்வு செய்து, அந்த இடங்களில் ரயில்களை மெதுவாகவும், கவனமாகவும் இயக்க ரயில் இன்ஜின் டிரைவர்கள் அறிவுறுத்தப்படுவர். மேலும் வனப்பகுதிகளில் ரயில்கள் 50 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும். தண்டவாளங்களில் யானைகள் நடமாட்டம் குறித்து கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வனத்துறை அமைச்சகத்துடன் இணைந்து ரயில்வே துறை செயலாற்றும். இந்த பிரச்னை தொடர்பாக ஆராய்வதற்கு விரைவில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள் ளது.