Pages

Tuesday, September 14, 2010

சோளக்காட்டுக்குள் யானைகள்

புஞ்சைபுளியம்பட்டி அருகே சோளக்காட்டுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் தீப்பந்தம் காட்டி பொதுமக்கள் விரட்டினர்

புஞ்சைபுளியம்பட்டி, செப்.15-
http://www.dailythanthi.com/article.asp?NewsID=594190&disdate=9/15/2010&advt=2

புஞ்சை புளியம்பட்டி அருகே சோளக்காட்டுக்குள் புகுந்த 2 யானைகள் விடிய விடிய அட்டகாசம் செய்தன. தீப்பந்தங்களை காட்டி பொதுமக்கள் யானைகளை காட்டுக்குள் விரட்டினர்.

யானைகள் அட்டகாசம்

ஈரோடு மாவட்டம், புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள உயிலம்பாளையத்தில் அங்கணகவுண்டர் என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில் அவர் சோளம் பயிரிட்டு இருந்தார். சோளக்கதிர் விளைந்து அறுவடை செய்யும் நிலையில் இருந்தது.
உயிலம்பாளையம் பண்ணாரி வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பண்ணாரி வனப்பகுதியில் இருந்து 2 யானைகள் உயிலம்பாளையம்- கள்ளிப்பட்டி ரோட்டை கடந்து அங்கணகவுண்டரின் சோளக்காட்டுக்குள் புகுந்தன. அங்கு நன்றாக விளைந்திருந்த சோளக்கதிர்களை பிடுங்கி நாசப்படுத்தியும், வேரோடு பிடுங்கி எறிந்தும் அட்டகாசம் செய்தன.

பொதுமக்கள் விரட்டினர்

சோளக்காட்டுக்குள் யானைகள் அட்டகாசம் செய்வது அறிந்த அங்கணகவுண்டர் தோட்டத்துக்கு விரைந்து வந்தார். இது பற்றி தகவல் பரவி உயிலம்பாளையம் பொதுமக்களும் அங்கு திரண்டு வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பட்டாசுகளை வெடித்தார்கள் ஆனால் யானைகள் காட்டை விட்டு வெளியே போகாமல் அங்கும் இங்கும் ஓடி சோளப்பயிர்களை நாசம் செய்தது.

நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு சோளக்காட்டுக்குள் நுழைந்த யானைகள் இரவு முழுவதும் சோளப்பயிர்களை நாசம் செய்தன. அதன் பிறகு பொதுமக்கள் தீப்பந்தங்களை கொளுத்தி யானைகளை விரட்டி அடித்தனர். நேற்று அதிகாலை 4 மணிக்கு யானைகள் சோளக்காட்டை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்றன.

இது பற்றி பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். வனப்பகுதியின் ஓரத்திலேயே யானைகள் சுற்றி திரிவதால் அடிக்கடி கிராமத்துக்குள் வந்து விடுகின்றன. அதனால் யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் அப்போது கோரிக்கை விடுத்தார்கள்.