Pages

Thursday, September 2, 2010

உயிருக்கு போராடும் காட்டு யானை

உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடும் காட்டு யானை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

http://www.dailythanthi.com/article.asp?NewsID=591562&disdate=9/3/2010&advt=2
துடியலூர்,செப்.3-

உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடும் காட்டு யானையை காப்பாற்ற வனத்துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

காட்டு யானை

கோவையை அடுத்த மாங்கரை வனத்தில், அனுவாவி சுப்பிரமணியர் கோவில் வளாகம் அருகே ஆண் யானை ஒன்று சுற்றி கொண்டிருக்கிறது. தனியாக வலம் வரும் இந்த யானையின் முன்னங்கால் பின்பகுதியில் காயம் இருக்கிறது. மேலும் அதன் உடல் நலமும் குன்றியிருக்கிறது.
 
அந்த யானை சாணம் போட்டால், அதில் புழுக்கள் நெளிகிறது. நடக்க முடியாமல் தள்ளாடியபடி வரும் இந்த யானையால் அடர்ந்த காட்டிற்குள் சென்று உணவு தேடமுடியவில்லை. கோவில் அருகே உள்ள குட்டையில் தண்ணீர் குடித்து அந்த பகுதியில் சுற்றி கொண்டிருக்கிறது.

யானையின் அவதி

கோவிலுக்கு வரும் பக்தர்கள் வழங்கும் பழம், தேங்காய் தான் யானைக்கு முக்கிய உணவு. சில மாதங்களுக்கு முன் யானை அதிக எடையுடன் கம்பீரமாக காட்சியளித்தது. ஆனால் யானை உடல் வற்றி பிளிற கூட முடியாமல் அவதிப்படுகிறது. இதுகுறித்து சுப்பிரமணியர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
 
ஆனால், இதுவரை இந்த யானையை மீட்டு சிகிச்சை தர எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை. நேற்று மாலை கோவில் அடிவாரத்தில் யானை சுற்றிக்கொண்டிருக்கிறது. இதுபற்றி கோவிலுக்கு வந்த பொதுமக்கள் கூறும்போது,
 
குடல் புழு நோய்
 
`யானைக்கு குடல் புழு நோய் தாக்கியிருக்கலாம். யானை எப்போதும் கோவில் அடிவாரம், ரோட்டோரத்தில் சுற்றுகிறது. யாரையும் விரட்டுவதில்லை. யானையின் காலில் காயம் இருப்பதால் இழுத்துக்கொண்டு நடக்கிறது. வனத்துறையினரிடம் கூறியபோது அவர்கள் கண்டுகொள்ளவில்லை. தென்னை மட்டை, தேங்காய் போட்டு யானையை தினமும் கவனித்து வருகிறோம்.
 
கடந்த ஆண்டு மாங்கரை வனத்துறை செக்போஸ்டில் இதேபோல் ஒரு யானை உடல் நலன் குன்றி சுற்றியது. அதனை வனத்துறையினர் காப்பாற்றினர். ஆனால், இப்போது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில காட்டுயானைகள், இந்த யானையுடன் அடிக்கடி மோதுகிறது. இப்படியே விட்டால் யானையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.' என்றனர்.
 
நடவடிக்கை?

இதுபற்றி வனத்துறையினரிடம் கேட்டபோது, `ஒரு யானை காயத்துடன் திரிவதாக தகவல் கிடைத்தது. ஆனால் அந்த யானையை தேடினோம். கிடைக்கவில்லை. கிடைத்தால் யானையை மீட்டு சிகிச்சை தர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.

அனுவாவி சுப்பிரமணியர் கோவில் வளாகம் அருகே யானை மிதித்து கடந்த 2 ஆண்டில் 2 பேர் இறந்தனர். தினமும் இந்த பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகள் வலம் வருகின்றன. உயிர் அபாய பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தில் தற்போது காயத்துடன் இந்த யானை திரிகிறது. மாதக்கணக்கில் நோயுடன் திரியும் இந்த யானையை மீட்டு காப்பாற்ற வேண்டும் என்பது கிராம மக்களின் கோரிக்கை ஆகும். இந்த யானை பல பகுதிகளில் சுற்றி திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.