Pages

Monday, January 10, 2011

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிகள் முக்கியம்:

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிகள் முக்கியம்: மத்திய விலங்குகள் நல வாரியம் கண்டிப்பு

ஜனவரி 10,2011,23:30 IST
http://www.dinamalar.com/News_Detail.asp?Id=163414

சென்னை: தமிழகத்தில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்தும் போது, "சுப்ரீம் கோர்ட்' விதித்துள்ள விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என, மத்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து மத்திய விலங்குகள் நல வாரிய தலைவர் கார்ப், சென்னையில் கூறியதாவது: தமிழகத்தில் பாரம்பரியமாக நடந்து வரும் விழாவான ஜல்லிக்கட்டு போட்டி, பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது.இவ்விழாவில், விலங்குகள் அதிகமாக பாதிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் மதுரை ஐகோர்ட், 2007ம் ஆண்டு இவ்விழாவை நடத்த தடை விதித்தது. தற்போது இந்த விழா, தமிழக அரசின் தலையீட்டின் காரணமாக நடந்து வருகிறது. இந்நிலையில், பொங்கல் வருவதால் விழா நடத்துவது தொடர்பான விதிகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் முறையாக கடைபிடிக்க வேண்டும். போட்டியில், தங்கள் மாடுகளை பங்கு பெறச் செய்ய விரும்புபவர்கள், அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் உரிய விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தின் விலை 500 ரூபாய்.

ஒரே விண்ணப்பத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாடுகளை பதிவு செய்யலாம். போட்டியில், பங்கு பெரும் மாடுகளை மதுபானத்தை குடிக்க வைப்பது, மிளாகாய்த்தூளை கண்ணில் தூவுவது போன்ற செயல்களைத் தடுப்பதற்காக, போட்டி துவங்குவதற்கு முன், மாடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். மேலும், போட்டி நடத்துவோர் முன்பணமாக 2 முதல் 5 லட்ச ரூபாய் வரை அரசுக்கு செலுத்த வேண்டும். வரும் ஜனவரி 28ல் மீண்டும் இந்த வழக்கின் விசாரணை வருகிறது. தற்போது நடைபெறும் போட்டிகளை படம் பிடித்து கோர்ட்டில் சமர்ப்பிப்போம். இது போன்ற நிகழ்ச்சிகளால் விலங்குகள் பாதிக்கப்படுவதோடு பலர் காயம் படுகின்றனர். எனவே, இதை தடை செய்ய, கோர்ட்டில் தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்போம். இவ்வாறு கார்ப் கூறினார்.